/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கவனம் செலுத்தலாமே விளக்குகள் இல்லாத டூவீலர்களால் விபத்துகள் வாகன விதிகளை கண்டுக்காததால் விபரீதங்கள்
/
கவனம் செலுத்தலாமே விளக்குகள் இல்லாத டூவீலர்களால் விபத்துகள் வாகன விதிகளை கண்டுக்காததால் விபரீதங்கள்
கவனம் செலுத்தலாமே விளக்குகள் இல்லாத டூவீலர்களால் விபத்துகள் வாகன விதிகளை கண்டுக்காததால் விபரீதங்கள்
கவனம் செலுத்தலாமே விளக்குகள் இல்லாத டூவீலர்களால் விபத்துகள் வாகன விதிகளை கண்டுக்காததால் விபரீதங்கள்
ADDED : ஜன 28, 2025 05:57 AM

எரியோடு: திண்டுக்கல் மாவட்டத்தில் டூவீலர்கள் பல முகப்பு, பின்புற விளக்குகள் இல்லாமல் ரோடுகளில் வலம் வருவதால் இரவு நேரங்களில் விபத்துகள் நடக்கின்றன. இதுதவிர வாகன பதிவு பலகை இல்லாமலும், போலி எண் பலகையுடனும் டூவீலர்கள் அதிகளவில் உலா வருகின்றன.
நாட்டில் டூவீலர்கள் புழக்கத்தில் வராத காலத்தில் போலீசார் சைக்கிள்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க 'டைனமோ' விளக்கு வசதி, பின்புற எதிரொளிப்பான் இல்லாமல் ரோடுகளில் செல்வோரை பிடித்து அபராதம் விதிப்பர். இப்படி எல்லாம் விபத்துகளை தவிர்க்க கண்டிப்பு காட்டப்பட்ட நிலையில் தற்போது ஏராளமான சைக்கிள்களில் பின்புற எதிரொளிப்பான், டூவீலர்களில் பின்புற விளக்குகள் எரியாமல் ரோட்டில் சாதாரணமாக இயங்குகின்றன. இத்தகைய வாகனங்கள் இரவு நேரங்களில் ரோட்டில் செல்லும் போது பின்னால் வேகத்தில் வரும் மற்ற வாகனங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் குறித்து தெரியாமல் விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. இதுதவிர விபத்துகளில் சிக்கி சிதைந்த டூவீலர்களில் முன்புற விளக்குக்குரிய அமைப்பு கூட இல்லாமல் ரோடுகளில் இயக்கப்படுகின்றன. டூவீலரை இயக்குவோர் பின்புறமாக வரும் வாகனங்களை கண்காணித்து தனது டூவீலரை இயக்க உதவும் கண்ணாடிகளும் இல்லாமல் இயக்கப்படுகின்றன. இத்தகைய வாகனங்கள் எளிதாக விபத்தில் சிக்குவதற்கும், மற்றவர்களை விபத்தில் சிக்க வைக்கவும் செய்கின்றன. வாகனங்களில் பதிவு எண் குறித்த விபர பலகைகள் இருப்பதில்லை. சிலர் போலி எண் பலகையுடன் வலம் வருகின்றனர்.
இதுபோன்ற டூவீலர்களில் வருவோர் அதிகளவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு தனித்துவமான நம்பர் பலகைகள் வழங்கப்படுகின்றன. இதையும் சிலர் கழற்றி வைத்துவிட்டு தங்கள் இஷ்டத்திற்கு எண்களை மிகவும் சிறிதாக, பெரியதாக மாற்றி ஸ்டிக்கர் முறையில் ஒட்டி வைத்துள்ளனர். அரசின் வாகன விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
..................
- கவனம் செலுத்தலாமே
ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டிகள் மீது விபத்து தவிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்திய போலீசார் டூவீலர் பெருக்கத்தால் அவற்றை கண்டுகொள்வதில்லை. டூவீலர்களிலும் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் குறித்து மட்டும் அவ்வப்போது கண்காணித்து அபராதம் விதிக்கப்படுகிறது. டூவீலர்களில் முகப்பு, பின்புற விளக்குகள் எரியாமல், கைப்பிடியில் இருக்க வேண்டிய கண்ணாடிகள் இல்லாமை, பதிவு எண் பலகை இல்லாமை, போலி பதிவு எண் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. கண்டிப்பு இல்லாத எந்த விஷயத்தையும் நமது நாட்டில் மாற்ற முடியாது. போலீசார் கண்காணித்து கண்டிப்பான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும்.
- பெ.செந்தில்குமார், வேடசந்துார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர், எரியோடு.
..............