/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்த பா.ஜ., கவுன்சிலர்
/
பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்த பா.ஜ., கவுன்சிலர்
ADDED : மார் 27, 2025 05:09 AM

திண்டுக்கல்: பாதாள சாக்கடை அடைப்பு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை என்பதால், பொதுமக்களுடன் இணைந்து பா.ஜ., கவுன்சிலர் தனபாலன் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி 14 வது வார்டு டெலிபோன் காலனி கொத்தனார் சந்து பகுதியில் பாதாளச் சாக்கடையில் மாதம் இருமுறை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுகிறது. இதுதொடர்பாக பா.ஜ., கவுன்சிலர் தனபாலன் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு வாரத்திற்கு முன் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
பொதுமக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் கவுன்சிலர் தனபால் பொதுமக்களுடன் இணைந்து, பாதாள சாக்கடை மூடியை அகற்றி அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
கவுன்சிலர் கூறியதாவது : மாநகராட்சி கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தை அனுப்பி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டேன். ஆனால் ஒரு வாகனத்தில் டீசல் இல்லை என்றும், மற்றொன்று பராமரிப்பு பணிக்கு சென்றுள்ளதாக கூறினர். மார்ச் 24 அன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கூட கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் தயாராக உள்ளது என மேயர் இளமதி கூறினார்.
வார்டில் பெரும்பாலான பகுதிகள் பள்ளமாக இருப்பதால் அடிக்கடி இந்த பிரச்னை ஏற்படுகிறது. வீட்டு வரியுடன் பாதாளச் சாக்கடைக்கும் கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மட்டும் முன் வர மறுக்கிறது என்றார்.