/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புத்தக திருவிழா: கவனம் ஈர்த்த புத்தகங்கள் சில ...
/
புத்தக திருவிழா: கவனம் ஈர்த்த புத்தகங்கள் சில ...
ADDED : செப் 03, 2025 09:22 AM

நாரத புராணம்
நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும். அது தேவலோகமோ, பூலோகமோ... மக்களுக்காக , மற்றவர்களுக்காக ஆன்மிக தொண்டு செய்த பிரம்ம தேவனின் புதல்வர் நாரதர் பற்றிய முழுமையான தொகுப்பு இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நாரதரின் பெருமைகள், தவ வலிமை, மானிடப் பிறப்பு, மறுபிறப்பு, தேவலோக வரவேற்பு, திரிலோக சஞ்சாரி, அகங்கார நாரதர் என மாண்புகள் சொல்லப்படுகின்றன. நாரதரை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கலகங்களையும், அவற்றின் பயன்களையும் விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: பிரபு சங்கர்
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
விலை: ரூ.220
பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள்
பொருநை ஆற்றின் வரலாறு, அதன் கரையில் உள்ள இடங்கள், ஆற்றில் உள்ள வரலாற்றுப் புதையல்கள், மறைக்கப்பட்ட கதைகள் போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இந்நுால் வெளிப்படுத்துகிறது. இந்நுாலில் தாமிரபரணியை மற்றொரு கண்ணோட்டத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ரசித்து எழுதி உள்ளார். பொதிகை, குற்றாலம், அத்ரி, பாபநாசம் மலை பயணம், மணிமுத்தாறு தலையருவி பயணம், மாஞ்சோலை வரலாறு என தான் களப்பணிக்காக சென்ற இடங்கள் உட்பட பல்வேறு சுவையான பொருநை கரை சிறப்புகளை எழுதி உள்ளார். பொருநை கரையில் பொதிந்த ரகசியங்களும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
விலை: ரூ.250
இருமுடி
இந்நுாலாசிரியர் ரவிவர்ம தம்புரான் மலையாளத்தில் சபரிமலை ஐயப்பனின் வாழ்க்கை வரலாறையும், தற்போது நிலவும் மத பயங்கரவாதத்தையும் சமூக அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து புதிய பார்வையில் நாவலாக இந்நுாலை எழுதி உள்ளார். இதை படிக்கும் வாசகர்களுக்கு சுவாமி ஐயப்பனுடன் பயணிக்கும் உணர்வும், நினைத்த பொழுதெல்லாம் சபரிமலையில் அலைந்து திரிந்த உணர்வும் கிட்டும். 'இருமுடிச் சோழன் உலா' என்ற சரித்திர நாவலும், 'மேல்மருவத்துார் அன்னையின் அருள்வாக்கு' எனும் புத்தகத்தில் உள்ள ஒரு பகுதியும் 'இருமுடி'என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றன. அழகு தமிழின் சுவையில், அரசியல் சமூக பின்னணியில் ஆன்மிகம் கலந்து பக்தி மணத்துடன் தமிழாக்கம் செய்துள்ளார் ஆசிரியர் ஜி.வி. ரமேஷ்குமார்.
ஆசிரியர்: ரவிவர்ம தம்புரான், ஜி.வி.ரமேஷ்குமார் (தமிழில்)
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
விலை: ரூ.360
உங்களில் ஒருவன்
இன்றைய தமிழக அரசியலை பற்றி ஆழமான பார்வையை செலுத்தும் புத்தகம். முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும் நுாலாசிரியருமான அண்ணாமலை, லோக்சபா தேர்தலுக்கு முன் மேற்கொண்ட அரசியல் பயணத்தின் கட்டுரை தொகுப்பு தமிழக மக்களின் மனங்களை கண்ணாடியாய் விவரிக்கிறது. வாசகர்களுக்கு, தமிழக அரசியல், சமூகத்தின் தற்போதைய நிலையை தெளிவாக புரிந்துகொள்ள இந்த நுால் உதவும். அரசியல் விரும்பும் ஒவ்வொருவருக்கும் உங்களில்ஒருவனை நிச்சயம் பிடிக்கும்.
ஆசிரியர்: கே.அண்ணாமலை
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
விலை : ரூ.600