/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார் புரோக்கரிடம் ரூ.6.50 லட்சம் மோசடி
/
கார் புரோக்கரிடம் ரூ.6.50 லட்சம் மோசடி
ADDED : டிச 18, 2024 02:41 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கார் புரோக்கரிடம் ஒரு மணி நேரத்தில் ரூ.10 ஆயிரம் அதிகம் தருவதாக கூறி ரூ.6.50 லட்சத்தை மோசடி செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் பிரேம்குமார் 55, கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவரிடம் ஆர்.எம்.காலனி கார் பெயின்டர் முருகன் 51, மனைவி நகைகளை ரூ.6.50 லட்சத்திற்கு தனியார் பைனான்சில் அடகு வைத்துள்ளேன். அதை மீட்க வேண்டும் எனக்கூறி ரூ.6.50 லட்சம் கேட்டார்.
மேலும் அதை தந்த ஒரு மணி நேரத்தில் ரூ.10 ஆயிரம் அதிகம் தருவதாகவும் கூறினார். அதை நம்பிய பிரேம்குமார் தன் மனைவியின் நகையை ரூ.6.50 லட்சத்திற்கு அடகு வைத்து பணத்தை முருகனிடம் கொடுத்தார். இதை பெற்றுக் கொண்ட முருகன் நீண்ட நேரம் ஆகியும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
இதனால் பிரேம் குமார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் முருகன், அவரது மனைவி ஈஸ்வரி பிரேம்குமாரிடமிருந்து பணத்தை பெற்று ஆர்.எம்., காலனியைச் சேர்ந்த பவித்ரா, மேற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிந்து பாரதி ஆகியோரிடம் கொடுத்தனர். அவர்கள் அப்பணத்தை கிழக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரியா, அவரது கணவர் சரவணனிடம் வழங்கியது தெரிந்தது. மேலும் பிரியா, 'ஈஸ்வரி, முருகன் தம்பதி பணம் கொடுக்க வேண்டும் என்பதால் அவர்கள் தந்த பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விட்டேன்,' என்றார்.
முருகன் - ஈஸ்வரி தம்பதி பலரிடம் இதுபோல மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதையடுத்து முருகன், ஈஸ்வரி, பவித்ரா, சிந்து பாரதி, பிரியா, சரவணனை போலீசார் கைது செய்தனர். பணத்தை ஒப்படைக்க பின் அவர்களை போலீசார் விடுவித்தனர்.