/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பரப்பலாறு அணையை துார்வார மத்திய அரசு அனுமதி
/
பரப்பலாறு அணையை துார்வார மத்திய அரசு அனுமதி
ADDED : நவ 19, 2025 05:55 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையை துார்வார மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் வடகாடு மலைப்பகுதியில் பரப்பலாறு அணை 1974 ல் கட்டப்பட்டது. மலைப்பகுதியில் உள்ள ஓடைகளில் இருந்து வரும் நீரே பரப்பலாறு அணையின் நீர் ஆதாரம் ஆகும். அணை கட்டப்பட்டுள்ள இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. ஆனால் அணையின் நீர் பிடிப்பு பகுதியான 285 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது.
வனத்துறையினர் நீரை தேக்கி கொள்ள மட்டுமே பொதுப்பணி துறைக்கு அனுமதி வழங்கி உள்ளனர். அணை கட்டப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு முறை கூட துார்வாரப்படவில்லை. இதனால் 90 அடி அணையில் 30 அடி அளவிற்கு வண்டல் மண் உள்ளது. 60 அடி மட்டுமே தண்ணீர் தேக்க முடிகிறது. அணையை துார்வார விவசாயிகள் நீண்ட காலமாக அரசிடம் கோரி வருகின்றனர்.
அமைச்சர் சக்கரபாணி சட்டசபையில் வலியுறுத்தியதன் பயனாக மாநில அரசு பரப்பலாறு அணையை தூர்வார ரூ. 19 கோடி நிதி ஒதுக்கியது.இருந்த போதிலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் , வனத்துறையினர் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. மத்திய அரசு அதிகாரிகள் இரு முறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் தற்போது மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அணையை துார்வார அனுமதி அளித்துள்ளது.
அணையின் நீர் பிடிப்பு பரப்பின் நிலை மாறாமல் 90 அடியை மீட்டெடுக்கும் பணியை தொடங்கவும் ,இப் பணியை 2028 டிச. 31 க்குள் முடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. பரப்பலாறு அணையை துார்வார மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதால் அணையின் மூலம் பாசன வசதி பெரும் விவசாயிகள், குடிநீர் வசதி பெறும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

