/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி
/
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி
ADDED : டிச 31, 2024 05:08 AM

திண்டுக்கல்: ஜல்லிகற்களை கொட்டி கிடப்பில் போடப்பட்ட ரோடுபணிகள்,குழாய்கள் அமைத்தும் தண்ணீர் இல்லை,தெரு விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்த தெருக்கள்,தினமும் நடக்கும் விபத்துக்கள்,கண்டு கொள்ளாத அதிகாரிகள் என எந்தவிதமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள் தவிக்கின்றனர்.
செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, ஆலக்குவார்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, ரெங்கநாதபுரம், திருப்பதி பாலாஜிநகர், டி.என்.எஸ்.டி.சி.நகர், இ.பி.காலனி, தீனதயாளன்நகர், சக்தி முருகன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கொண்டது செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு முறையாக தெரு விளக்குகள் இல்லாமலிருப்பதால் மக்கள் இரவில் வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர். இரவில் மர்ம நபர்கள் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். திருப்பதி பாலாஜி நகர் போன்ற பகுதிகளில் போஸ்ட்கள் மட்டும் உள்ளது. தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை. சில பகுதிகளில் எப்போதும் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு துணை போகிறது. இதனால் தொற்று நோய்களும் அதிகளவில் பரவுகின்றன. மழை நேரங்களில் மழைநீர் கழிவுநீரோடு சேர்ந்து ரோட்டில் குளம்போல் ஓடுகிறது. கொசு மருந்துகள் அடிக்காமல் இருப்பதால் இரவு, மட்டுமில்லாமல் பகல் நேரங்களில் கொசுக்கள் மக்களை கடித்து துன்புறுத்துகிறது. ரோடுகள் அமைக்கப்படாமல் மண் ரோடுகளாகவே உள்ளது. மக்கள் இங்குள்ள பிரச்னைகள் குறித்து புகார்கள் கொடுத்த போதிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருப்பதால் மக்கள் வேதனையோடு தவிக்கின்றனர். திருப்பதி பாலாஜிநகர், டி.என்.எஸ்.டி.சி.நகர், தீனதயாளன்நகர், சக்தி முருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோடுகள் போடுவதற்காக ஜல்லிகற்களை ரோட்டில் கொட்டி வைத்து 6 மாதங்களாகியும் இன்னும் ரோடுகள் போடவில்லை. இதனால் ஜல்லிக்கற்கள் மீது வாகனங்களை ஓட்டி செல்லும் மக்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
வசதிகள் இல்லை
வெற்றிவேல், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்,திருப்பதி பாலாஜி நகர்: குப்பையை அள்ள துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால் ரோட்டோரங்களில் குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. அங்கேயே தீயிட்டு எரிப்பதால் சுவாச கோளாறுகளும் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. குடிதண்ணீர், ரோடு, சாக்கடை வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளுமே இல்லாததால் மக்கள் தவிக்கிறோம்.
தொடரும் விபத்துக்கள்
கணேசன், பா.ஜ., மேற்கு ஒன்றிய செயலாளர், பெருமாள் கோவில்பட்டி: ரோடுகள் போடுவதற்காக 6 மாதத்திற்கு முன் ஜல்லிக்கற்களை ஊராட்சி நிர்வாகத்தினர் கொட்டி சென்றனர். இதுவரை ரோடுகள் அமைக்கவில்லை. இதனால் ஜல்லிக்கற்கள் மீது ஏறி செல்லும் வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நிற்கின்றனர். சிலர் ஜல்லிக்கற்களில் தடுமாறி கிழே விழுந்து விபத்தில் சிக்கி காயப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மக்கள் அச்சம்
சித்ரா, டி.என்.எஸ்.டி.சி.,நகர்: எங்கள் பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாமலிருப்பதால் பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர். இரவில் வேலைக்கு சென்று வீட்டிற்கு வருவோருக்கும் அச்சமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இங்கு நடக்கும் பிரச்னைகள் குறித்து தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தான் வேதனையாக உள்ளது. எங்கள் பகுதி தெருக்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
லதா, ஊராட்சி தலைவர், செட்டிநாயக்கன்பட்டி: செட்டிநாயக்கன்பட்டி பகுதிகளில் ரோடுகள் போடுவதற்காக உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தெரு விளக்குகள் இல்லாத பகுதிகளில் விரைவில் தெரு விளக்குகள் அமைக்கப்படும். துாய்மை பணியாளர்கள் மத்தியில் கூட்டம் நடத்தி எல்லா பகுதிகளுக்கும் சென்று துாய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.