/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குளத்திற்கு தண்ணீரை கொண்டு வந்த சித்தரேவு இளைஞர்கள்
/
குளத்திற்கு தண்ணீரை கொண்டு வந்த சித்தரேவு இளைஞர்கள்
குளத்திற்கு தண்ணீரை கொண்டு வந்த சித்தரேவு இளைஞர்கள்
குளத்திற்கு தண்ணீரை கொண்டு வந்த சித்தரேவு இளைஞர்கள்
ADDED : ஜன 15, 2024 04:52 AM

சித்தேரவு மந்தை குளத்தை சீர்படுத்தி பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தண்ணீர் தேங்க வழிவகை செய்தனர் சித்தரேவு பகுதியை சேர்ந்த இளைஞர்கள்.
தாண்டிக்குடி மலையடிவாரம், மருதாநதி அணையின் நீர்ப்பாசன பகுதி என செழுமையான இடத்தில் இருக்கும் கிராமம் சித்தரேவு. இங்கு முக்கிய நீர் ஆதாரமாக மந்தை குளம் உள்ளது. மந்தை குளத்திற்கான ஓடைகள் காலப்போக்கில் தடைபட்டு குடியிருப்புகளாக மாறின.
சில ஓடைகள் சாக்கடையாக குறுகிப்போனது. எவ்வளவு மழை பெய்தாலும் கிராமத்தில் ஆண்டிற்கு ஆண்டு குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே தான் சென்றது. கடந்த காலங்களில் இருந்த பசுமை, குடிநீர் வசதி காலப்போக்கில் குறைந்து வருவதை அறிந்த இளைஞர்கள் குழு தண்ணீருக்கு அடிநாதமான மந்தை குளத்திற்கு உயிர் ஊட்ட முடிவு செய்து அதற்குண்டான நடவடிக்கைகளில் இறங்கினர். இதற்கு வடக்கு வாய்க்கால் இடையிலேயே நின்று போனது பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது. இந்த வாய்க்காலை தொடர்ச்சியாக கொண்டு வந்து குளத்தில் இணைத்தால் தண்ணீர் கிடைக்கும் என்பது நிதர்சனம். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு வடக்கு வாய்க்காலிலிருந்து புதிதாக இணைப்பு கால்வாய் மந்தை குளத்திற்கு விவசாயிகள் இளைஞர்களின் முயற்சியால் பொதுப்பணித்துறை ஒத்துழைப்போடு ஏற்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் வடக்கு வாய்க்கால் தண்ணீர் மந்தை குளத்திற்கு வருவது குதிரைக் கொம்பாக இருந்ததற்கு முக்கிய காரணம் இந்த வாய்க்காலுக்கு பாசன வசதி உபரி நீர் மட்டுமே கிடைக்கும் என்பதுதான். சமீப ஆண்டுகளாக அணையில் தண்ணீர் தேவையான அளவைவிட வெளியேறி வந்ததால் இங்குள்ள இளைஞர்கள் உபரி நீரை கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்தனர். கால்வாயில் புதர் மண்டி இருந்தது. அதையும் இளைஞர்கள் களமிறங்கி புதர்களை அகற்றி தண்ணீர் வர செய்து கடந்த ஆண்டில் இரண்டு முறையும் தற்போதும் நிறைத்து உள்ளனர். இதனால் கால்நடைகளை வைத்திருப்போர் நாளை மாட்டுப் பொங்கல் தினமான நாளை கால்நடைகளை குளிப்பாட்டி அலங்காரம் செய்வதற்கு நல்ல வசதியாக உள்ளது என கிராமத்தினர் இளைஞர்களை பாராட்டுகின்றனர்.
துார்வார வேண்டும்
நசுருதீன், சித்தரேவு: விவசாயிகள் இளைஞர்கள் பொது நல விரும்பிகளால் மந்தை குளத்திற்கு தண்ணீர் வர செய்தது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. வரும் காலங்களிலும் தண்ணீரை நிரப்புவதற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறோம். எங்களோடு துணை நின்ற அத்தனை இளைஞர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். குளத்திற்கு வரும் ஓடைகளை துார்வாரினால் மிகவும் நன்றாக இருக்கும்.