ADDED : டிச 23, 2024 05:30 AM

திண்டுக்கல்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் கலர் கலரான ஸ்டார்கள் விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது. பொது மக்களும் ஆர்வமாக வாங்கி சென்று தங்கள் வீடுகளில் தொங்க விடுகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் பொது மக்கள் இரவு நேரங்களில் தங்கள் வீடுகள்,வாசல்களில் வண்ண வண்ண ஸ்டார்களை பார்ப்போரின் கண்களை கவரும் விதமாக தொங்கவிடுகின்றனர். இதனால் ஸ்டார்களை விற்பனை செய்யும் கடை வியாபாரிகள் கிறிஸ்துமஸ் நெருங்கும் சமயங்களில் வெளி மாவட்டங்களிலிருந்து அதிகளவில் புது புது வடிவங்களிலான ஸ்டார்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.
டிச.25ல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி அருகில் உள்ள கடை வீதிகள்,பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் இரவு நேரங்களில் வரும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வண்ண வண்ண ஸ்டார்களை கடைகள் முன்பாக தொங்க விட்டுள்ளனர்.
இதை அவ்வழியில் செல்லும் பொதுமக்கள் பார்த்து தங்கள் வீடுகளுக்கு தேவையான ஸ்டார்களை ஆர்வமாக வாங்கி செல்ல தொடங்கியுள்ளனர்.
இதனால் கடை வீதிகளில் வழக்கத்தை விட அதிகளவில் மக்கள் கூட்டம் இருந்தது. இதனால் ஸ்டார் விற்பனை நகர் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.

