/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இலை கருகல் நோயால் தென்னைகள் பாதிப்பு
/
இலை கருகல் நோயால் தென்னைகள் பாதிப்பு
ADDED : நவ 25, 2024 05:06 AM
வடமதுரை : வடமதுரை சின்னரெட்டியபட்டி பகுதி தென்னை மரங்களில் இலை கருகல் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வடமதுரை சின்னரெட்டியபட்டி பகுதி தென்னை மரங்களில் இலை கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் இருக்கும் சில தென்னை மர மட்டைகளில் முதலில் கரும்புள்ளி தோன்றியது. பின்னர் அது பெரிதாக 4 நாட்களில் மட்டை முழுதும் மஞ்சள் நிறமாக மாறி சுருண்டும் விடுகிறது. அடுத்தடுத்த மரங்களுக்கு பரவி தற்போது 20க்கு மேற்பட்ட மரங்களில் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் கயல்விழி கூறியதாவது: சின்னரெட்டியபட்டி இலை கருகல் நோய் தாக்குதல் குறித்து தகவல் வரவில்லை.
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தீர்வாக மேலாண்மை முறையாக முதலில் பாதிக்கப்பட்ட மட்டைகளை வெட்டி அகற்றி அழிக்க வேண்டும்.
தோப்பில் இருக்கும் எல்லா மரங்களுக்கும் போர்டோக் கலவை,காப்பர் ஆக்சி குளோரைடு 2 மிலிக்கு ஒரு லிட்டர் நீர் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 நாட்கள் தெளிக்க வேண்டும். ஒரு மரத்திற்கு ஆண்டிற்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் 50 கிலோ மக்கிய எருவுடன் சூடோமோனஸ் 100 கிராம் கலந்து மண்ணில் இட வேண்டும் என்றார்.