/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்லுாரி பஸ் ----- ரயில் மோதல்: 24 பேர் காயம்
/
கல்லுாரி பஸ் ----- ரயில் மோதல்: 24 பேர் காயம்
ADDED : மார் 15, 2026 05:53 AM

கரூர்: கல்லுாரி பஸ் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில், 24 பேர் காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தியில், வி.எஸ்.பி., பொறியியல் கல்லுாரிக்கு சொந்தமான பஸ், நேற்று மாலை, 5:45 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருடன் வந்தது.
பஸ்சை, கரூர் மாவட்டம், கடவூர் கலிங்கப்பட்டியை சேர்ந்த பெரியசாமி, 64, ஓட்டினார்.
வெள்ளியணை அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் பஸ் சென்ற போது, திண்டுக்கல் மாவட்டம், கரிகாலியில் உள்ள கல் குவாரி சைட்டில் இருந்து, கரூர் புலியூரில் உள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு, கல் துகள்களை ஏற்றி வந்த சரக்கு ரயில், ஆளில்லாத ரயில்வே கேட்டை, கடக்க முயன்ற கல்லுாரி பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் பஸ் நொறுங்கியது. பஸ்சில் இருந்த மாணவ - மாணவியர், டிரைவர் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்த விபத்து, தனியார் ரயில் பாதையில் நடந்தது.
தெற்கு ரயில்வே அதிகார வரம்பில் அந்த பாதை இல்லை' என, தெரிவித்துள்ளது.

