UPDATED : ஆக 20, 2026 10:50 PM
ADDED : ஆக 20, 2026 10:44 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி, ஜப்பான் ஹெச்.டு. இன்னோவேஷன்ஸ் கம்பெனி லிமிடெட், சென்னை கே.கே.சி.சி.எஸ்., இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மற்றும் நிலைத்த ஆற்றல் தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் வகையில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் பசுமை ஆற்றல் ஆராய்ச்சி மற்றும் நிலையான தொழில்நுட்ப வளர்ச்சி மையம் இயங்குகிறது. இந்நிலையில் இக்கல்லுாரியின் 2 ஆசிரியர்கள், 2 மாணவர்கள் ஜப்பான் சென்று பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, கழிவுகளில் இருந்து ஆற்றல் தயாரிப்பு, எரிபொருள் செல், நிலையான ஆற்றல் தொழில்நுட்பங்கள் தொடர்பான பல்வேறு ஆய்வகங்கள், தொழில்நுட்ப வசதிகளை நேரடியாக பார்வையிட்டு திறன்மிக்க அனுபவங்களை பெற்று இந்தியா திரும்பினர். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கல்லுாரியின் நிறுவன தலைவர் ரகுராம், ஜப்பான் ஹெச்.டு. இன்னோவேஷன்ஸ் கம்பெனி லிமிடெட் சி.இ.ஓ., யோசுகே மொரி, கே.கே.சி.சி.எஸ்., இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கருணாநிதி, தொழில்நுட்ப ஆலோசகர் வெங்கடேசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். இதன் மூலம் கே.கே.சி.சி.எஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒருங்கிணைப்பாளராக செயல்படும்.
இந்த முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா ஜப்பான் கல்வி, தொழில்துறை ஒத்துழைப்பில் முக்கிய மைல் கல்லாக அமையும் என கல்லுாரியின் நிறுவனத் தலைவர் ரகுராம் தெரிவித்தார்.
