/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; திண்டுக்கல் போலீஸ் திண்டாட்டம்
/
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; திண்டுக்கல் போலீஸ் திண்டாட்டம்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; திண்டுக்கல் போலீஸ் திண்டாட்டம்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; திண்டுக்கல் போலீஸ் திண்டாட்டம்
ADDED : செப் 23, 2024 09:53 PM

திண்டுக்கல்: தேனி பஸ் ஸ்டாண்டிலிருந்து நர்சிங் கல்லூரி மாணவியை 7 பேர் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே இறக்கிவிட்டு சென்றனர். 8 மணி நேரம் விசாரணை செய்தும் முழுமையான தகவல் தெரியாமல் போலீசார் திணறினர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான நர்சிங் கல்லூரி மாணவி நேற்று காலை தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது பெண் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை பஸ் ஸ்டாண்டில் இருந்து காரில் கடத்தி திண்டுக்கல்லுக்கு வந்தனர். வரும் வழிகளில் மாணவிக்கு அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்தது. திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்ததும் அந்த கும்பல் மாணவியை இறக்கி விட்டு தப்பியது. தொடர்ந்து அங்கிருந்து மாணவி திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.
நடந்த விஷயங்களை அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி,எஸ்.ஐ. வனிதா தலைமையிலான போலீசார் மாணவியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். எஸ்.பி.,பிரதீப் மாணவியிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். தொடர்ந்து மாணவி கூறிய விஷயங்களை நேரில் சென்று அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சில தகவல்கள் இல்லாமல் இருந்தது. தேனி மாவட்ட போலீசாரை தொடர்பு கொண்ட திண்டுக்கல் போலீசார் தேனி பஸ் ஸ்டாண்டில் மாணவி கடத்தப்பட்டதாக கூறிய இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தினர். தேனி போலீசார் அங்கிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதிலும் மாணவி கூறிய விஷயங்கள் சில விஷயங்கள் இல்லை. இதனால் குழப்பம் அடைந்த தேனி போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் மீண்டும் விசாரணையை துவக்கினர்.
மதியம் 1:00 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு 8:00 மணி வரை நீடித்தது. 8 மணி நேரம் விசாரணைக்கு பின்னும் முழுமையான தகவல்கள் கிடைக்காததால் போலீசார் திணறினர். முடிவில் மாணவி கூறிய விஷயங்களை வைத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டது. அடுத்த கட்டமாக மாணவி கடத்தப்பட்டதாக கூறிய இடம் தேனி என்பதால் தேனி மாவட்டத்திற்கு வழக்கு மாற்றப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.