/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறுகலான சாக்கடைகளால் கழிவு தேக்கம்; தேவை மகளிர் சுகாதார வளாகம் பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 5 வது வார்டு
/
குறுகலான சாக்கடைகளால் கழிவு தேக்கம்; தேவை மகளிர் சுகாதார வளாகம் பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 5 வது வார்டு
குறுகலான சாக்கடைகளால் கழிவு தேக்கம்; தேவை மகளிர் சுகாதார வளாகம் பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 5 வது வார்டு
குறுகலான சாக்கடைகளால் கழிவு தேக்கம்; தேவை மகளிர் சுகாதார வளாகம் பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 5 வது வார்டு
ADDED : செப் 28, 2024 04:31 AM

ஒட்டன்சத்திரம் : குறுகலான சாக்கடைகளால் தேங்கும் கழிவு நீர், மகளிர் சுகாதார வளாகம் இன்றி சிரமம் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 5 வது வார்டில் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளம் உள்ளன.
சத்யா நகர், ஏ.பி.பி .நகர் கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் அங்கன்வாடி மைய கட்டடம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது இந்த இடத்தில் புதிதாக கல்யாண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
இரண்டு வார்டுகளுக்கும் சேர்த்து ஒரே கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. சாக்கடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து உள்ளது. பல இடங்களில் சாக்கடை குறுகலாக இருப்பதால் கழிவுநீர் தேங்கி உள்ளது.
அவற்றுக்கு பதிலாக புதிய சாக்கடை அமைக்க வேண்டும். தெருப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் கடைக்கோடியில் உள்ள வீடுகளுக்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. குடிநீர் குழாய் போடுவதற்காக தெரு ரோடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது . பல இடங்களில் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும்.
சேதமான தெருரோடுகள்
நாகராஜ், கூலி தொழிலாளி : குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. குறுகலான சாக்கடையில் தேங்கி உள்ள கழிவு நீரால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. தேவையான இடங்களில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
கழிப்பிடமாக திறந்த வெளி
சின்னராசு, கூலி தொழிலாளி : வார்டில் பெண்களுக்கு என பொது கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டி உள்ளது. சாக்கடை மேலேயே ஆக்கிரமிப்பு இருப்பதால் சாக்கடையை சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
சின்ன குளம் பகுதியில் உள்ள கழிப்பறை கட்டடத்துக்கு போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
கொசு மருந்து அடியுங்க
திருமூர்த்தி, ஊர் நாட்டாமை: விநாயகர் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் கட்டுவதற்கான முயற்சி இல்லை. இதனால் நெருக்கடியான இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. சாக்கடைகள் துார் வாராமல் கழிவுநீர் தேங்கியுள்ளது. அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும்.
ரூ.1 கோடியில் திருமண மண்டபம்
சாந்தி, கவுன்சிலர் (தி.மு.க.,): சத்யா நகரில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. போர்வெல்கள் சரி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கும் வகையில் சத்யாநகரில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிதாக ரேஷன் கடை வேண்டுமென அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்தோம். அதன் பயனாக நுாலகம் அருகில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கோயில் அருகே ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாக்கடை, தெருக்களில் சிறுபாலங்கள், ரோடு அமைக்க நகராட்சி நிதி ஒதுக்கி உள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்ட உடன் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்படும் என்றார்.