/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்ட கோயில்களில் கும்பாபிஷேகம்
/
மாவட்ட கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 11, 2025 05:38 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆத்துார் காந்திகிராமம் சிலோன் காலனி ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
நான்கு கால யாகசாலை பூஜையை தொடர்ந்து புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் கோயிலை வலம் வர கோயில் கலசங்களில் காலை 10:05 மணிக்கு புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காந்திகிராமம் ஸ்ரீ வெள்ளியங்கிரிநாதர், ஸ்ரீ தண்டினி வராகி அம்மன் கோயில் அர்ச்சகர் சிவஸ்ரீ பாண்டியராஜ் நடத்தி வைத்தார்.
நத்தம்: லிங்கவாடி இச்சிமரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் தொடங்கியது. நேற்று காலை கோ பூஜை, புணர் பூஜைக்கு பின் யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனித தீர்த்த குடங்கள் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க குடம், குடமாக புனித தீர்த்தங்கள் கலசத்தில் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை லிங்கவாடி மேற்குத்தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.
செந்துறை: செந்துறை அருகே கோட்டையூர் முத்தாலம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலசங்களில் புனித நீர் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.
பட்டிவீரன்பட்டி: நாடார் உறவின் முறைக்கு பார்த்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக பூஜைகள் பிப்.7ல் விநாயகர் பூஜையுடன் துவங்கியது.
கணபதி, சுதர்சன, நவக்கிரக ஹோமங்கள் நடந்தன. நேற்று கோ பூஜை, நாடி சந்தனம், தீப ஆராதனைகள் நடக்க புண்ணிய தீர்த்தங்கள் கோயிலை சுற்றி வலம் வர கோபுர கலசங்களுக்கு ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
வத்தலக்குண்டு: தர்மத்துப்பட்டி காளியம்மன், பகவதி அம்மன், மந்தையம்மன், கோட்டை கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஊர் பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் மூன்று நாட்கள் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனை அலங்கரிக்க தர்மத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் தங்க நகைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பக்தர்களால் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்ட தங்க ஆபரண அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
சின்னாளபட்டி: சின்னகலிக்கம்பட்டியில் வீரம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கிராம தெய்வங்களுக்கு கனி வைத்தல், தீர்த்தம் அழைப்பு, கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
கொடைக்கானல்: கோடை இன்டர்நேஷனல் ஓட்டலில் உள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் ஆறு கால யாகசாலை பூஜை தொடர்ந்து கலசத்திற்கு புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
ஏற்பாடுகளை கோடை இன்டர்நேஷனல் விடுதி நிர்வாக இயக்குனர் பாண்டுரங்கன், பணியாளர்கள் செய்திருந்தனர்.