/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடியிருப்பு பகுதியில் செயல்படும் காட்டேஜ்கள் கொடைக்கானல் 21 வது வார்டில் தொடரும் அவலம்
/
குடியிருப்பு பகுதியில் செயல்படும் காட்டேஜ்கள் கொடைக்கானல் 21 வது வார்டில் தொடரும் அவலம்
குடியிருப்பு பகுதியில் செயல்படும் காட்டேஜ்கள் கொடைக்கானல் 21 வது வார்டில் தொடரும் அவலம்
குடியிருப்பு பகுதியில் செயல்படும் காட்டேஜ்கள் கொடைக்கானல் 21 வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : டிச 07, 2024 06:48 AM

கொடைக்கானல்: - குடியிருப்பு பகுதியில் செயல்படும் காட்டேஜ்களால் கொடைக்கானல் நகராட்சி 21 வது வார்டு மக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆனந்தகிரி 4 முதல் 7 தெருக்கள், கூலிக்காட் ரோடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. குடியிருப்பு பகுதியில் செயல்படும் காட்டேஜ்களால் குடியிருப்பு வாசிகள் நித்தம் அவதிக்குள்ளாகின்றனர். தெருநாய் பிரச்னையால் இங்குள்ள மக்கள் ஒரு வித அச்சத்திலே உள்ளனர். பட்டா இல்லாததால் அரசு சலுகைகளை பெற முடியாது இங்குள்ளமக்கள் பாதிக்கின்றனர். சேதமடைந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ள நிலையிலும் மின் துறையினர் எதையும் கண்டுக்காமல் உள்ளனர். சமூக விரோதிகள் போதை வஸ்துக்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் நடமாட அச்சமாக உள்ளது. சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். வாய்க்கால் இணைப்பு இல்லாததால் கழிவு நீர் ரோட்டில் தேங்கும் நிலையில் தொற்று ஏராளமான பிரச்னைகள் இங்கு குவிந்துள்ளன.
தேவை தனி பார்க்கிங்
பீட்டர், டிரைவர் : ஆனந்தகிரி நான்காவது தெருவில் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பகுதியில் உள்ள காட்டேஜ்களுக்கு வரும் வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவதே பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் காலை, மாலையில் பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது. இதற்கு தனி பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும். தெரு நாய் பிரச்னைகளால் குடியிருப்பு வாசிகள் நாள்தோறும் அவதிப்படும் நிலை உள்ளது.
மின்கம்பங்களால் விபத்து
பொன்னையன், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் : வார்டில் புதிய தெருவிளக்கு அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டு சரி செய்யப்படாமல் உள்ளது.
இதை விரைவில் சரி செய்ய வேண்டும். நான்காவது தெருவில் வாய்க்கால்களை ஒருங்கிணைத்து அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி கழிவு நீரை கடத்த வேண்டும். நீதிமன்றம் அருகே சேதமடைந்த மின்கம்பங்களால் விபத்து அபாயம் உள்ளது.இதனையும் மாற்ற மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நடவடிக்கை எடுக்கப்படும்
மாயகண்ணன், கவுன்சிலர்,(தி.மு.க., நகராட்சி துணைத் தலைவர்) :வார்டில் இதுவரை ரூ.2 கோடி 62 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. வார்டில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த ப்ளூ கிராஸ் அமைப்பு மூலம் அறிவுறுத்தல் செய்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இருந்தபோதும் தமிழகம் முழுவதும் இப்பிரச்னை உள்ளதால் அமைச்சரிடம் கூறப்பட்டுள்ளது. ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போக்குவரத்து துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களை நிறுத்துவதற்கு எம்.எல்.ஏ., மூலம் பார்க்கிங் வசதிக்கு முயற்சி செய்யப்படும் என்றார்.