ADDED : பிப் 14, 2024 04:39 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் மாநகராட்சியில் குடிதண்ணீர் கட்டணத்தை ஏராளமானோர் செலுத்தாமலிருப்பதால் ரூ.3 கோடி பாக்கி உள்ளது. இதனால் குடிநீர் வரி செலுத்தாமலிருப்பவர்கள் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 32 ஆயிரம் பேருக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறது.
இருந்தபோதிலும் சிலர் ஆண்டுக்கணக்கில் குடிநீர் கட்டணம் செலுத்தாமலிருப்பதால் ரூ.3 கோடி பாக்கி உள்ளது. மாநகராட்சி சார்பில் நடக்கும் நலத்திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாக்கித்தொகையை வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகள் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு வீடு வீடாக சென்று எச்சரித்தபோதிலும் பாக்கி வசூலாகாமல் உள்ளது. இதனால் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டார்.இதன்படி நகர் முழுவதும் கட்டணம் செலுத்தாதவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

