ADDED : அக் 02, 2024 02:07 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவிலுக்கு, உலகம் முழுதுமிருந்து பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். ஜன., 27, 2023ல் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், புனரமைக்கப்பட்ட ராஜ கோபுரத்தின் வலது புற சுதை சிற்பமான, யாழியின் பின்புறம் வளைவு உடைந்துள்ளது. கும்பாபிேஷகம் நடந்து ஒரு ஆண்டே ஆன நிலையில், சிற்பம் உடைந்துள்ளதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடைந்த சுதை சிற்ப வளைவை, ராஜகோபுரம் மீதுள்ள இடிதாங்கி கீழே விழாமல் தாங்கிப் பிடித்துள்ளது.
மனிதர்களால் சேதப்படுத்த முடியாத உயரத்தில் இச்சிற்பம் உள்ளதால், மின்னல் தாக்கியிருக்கலாம் அல்லது தரமற்ற பணிகளால் சேதமடைந்திருக்கலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.
கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து கூறுகையில், ''ராஜகோபுரத்தின் சுதை சிற்பம் சேதமடைந்துள்ளதை, ஆகம விதிகளுக்கு உட்பட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்படும்,'' என்றார்.