/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகள்...கொசுத்தொல்லை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 13 வது வார்டு மக்கள்
/
சேதமான ரோடுகள்...கொசுத்தொல்லை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 13 வது வார்டு மக்கள்
சேதமான ரோடுகள்...கொசுத்தொல்லை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 13 வது வார்டு மக்கள்
சேதமான ரோடுகள்...கொசுத்தொல்லை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 13 வது வார்டு மக்கள்
ADDED : மே 17, 2025 01:40 AM

ஒட்டன்சத்திரம்: குடிநீர் பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட ரோடுகளால் அவதிப்படும் வாகன ஓட்டிகள், கொசுத்தொல்லையால் அவதி என ஒட்டன்சத்திரம் நகராட்சி 13வது வார்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேட்டுப்பட்டி, தும்மிச்சம்பட்டி, முத்தாலம்மன் கோயில் தெரு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் உள்ள மேட்டுப்பட்டி தெற்குப் பகுதி விரிவாக்க பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ரோடு வசதி கூட இல்லாமல் இருந்தது.
சமீபத்தில் வடிகால் வசதியுடன் ரோடு அமைக்கப்பட்டது. ஆனால் காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக ரோடு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவை சீரமைக்கப்படாமல் இருப்பதால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.
கொசு தொல்லையால் நோய் தொற்றுக்கு வழி வகுக்கிறது . இதை தடுக்க அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும்.
இரண்டு வார்டுகளுக்கு பொதுவாக இருந்த ரேஷன் கடை பிரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமம் இன்றி ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். ரேஷன் கடை , அங்கன்வாடிக்கு சொந்த கட்டடம் தேவை என்ற கோரிக்கை இருந்து வருகிறது. சாக்கடையில் கழிவு நீர் தேங்காமல் இருப்பதற்கு அடிக்கடி துார்வார வேண்டுமென இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
சேதமான தெரு ரோடுகள்
ஆனந்தன், பா.ஜ., மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்: குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக வார்டுக்குள் இருக்கும் தெரு ரோடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை இயக்க மிகவும் சிரமமாக உள்ளது. ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும். சாக்கடையை அடிக்கடி துார்வார வேண்டும். இப்பகுதியில் இன்னும் அதிகப்படியான தெரு விளக்குகள் ,தெருக்களில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.
கொசு தொல்லை அதிகரிப்பு
காமாட்சி ராஜா, பா.ஜ., நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், ஒட்டன்சத்திரம்: வார்டுக்குள் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால் அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும். விரிவாக்க பகுதிகளில் இன்னும் அதிகப்படியான தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். ரேஷன் கடை,அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். முத்தாலம்மன் கோயில் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் என்பதால் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றம்
கண்ணன், கவுன்சிலர் (தி.மு.க.,): ரேஷன் கடை, அங்கன்வாடிக்கு, சொந்த கட்டடம் கட்டுவதற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் சொந்த கட்டடம் கட்டப்படும். வையாபுரி லைன் பின்புறம் ரூ.5 லட்சம் மதிப்பில் வடிகால், மேட்டுப்பட்டி மெயின் ரோட்டில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் கட்டப்பட்டு பெரிய வடிகால் கட்டப்பட்டுள்ளது. காவிரி கூட்டு குடிநீர் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன் தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படும். முத்தாலம்மன் கோயில் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து முடிந்தவுடன் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.