/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகள், ரேஷன் பொருட்கள் வாங்க அலைக்கழிப்பு
/
சேதமான ரோடுகள், ரேஷன் பொருட்கள் வாங்க அலைக்கழிப்பு
சேதமான ரோடுகள், ரேஷன் பொருட்கள் வாங்க அலைக்கழிப்பு
சேதமான ரோடுகள், ரேஷன் பொருட்கள் வாங்க அலைக்கழிப்பு
ADDED : நவ 23, 2024 05:55 AM

வடமதுரை; அய்யலுார் குப்பாம்பட்டி பகுதியில் சேதமான ரோடு, அதிகாரிகள் மறந்த பள்ளிக்கூடம், ரேஷன் பொருட்கள் வாங்க இரு இடங்களுக்கு 2 நாட்கள் அலைகழிக்கப்படும் நிலை என பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பரிதவிக்கின்றனர்.
அய்யலுாரிலிருந்து கோம்பை செல்லும் குப்பாம்பட்டி உள்ளது. அருகில் கணவாய்பட்டி, முடிமலைத் தோட்டம், களத்துபட்டி, சுக்காவழி என கிராமங்கள் அமைந்துள்ளன. குப்பாம்பட்டி பகுதியில் அலைபேசி சேவைவ சரிவர கிடைக்காத நிலையால் இங்குள்ள மக்கள் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தி ரசீது வாங்க முதல் நாள் அய்யலுாருக்கு செல்கின்றனர். குப்பாம்பட்டியில் இருக்கும் பகுதி நேர ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குகின்றனர். இதனால் ஒவ்வொரு மாதம் ரேஷன் பொருட்கள் வாங்க இரு நாட்களை செலவிடும் நிலை உள்ளது. இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 122 மாணவர்கள் படிக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சேதமான கட்டடம் அகற்றப்பட்டும் இதற்கு பதிலாக இன்றும் புதிய கட்டடம் கட்டப்படாமல் உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
பஸ் சேவை வேண்டும்
கே.பெரியசாமி, அ.தி.மு.க., நகர விவசாய அணி செயலாளர், குப்பாம்பட்டி: குப்பாம்பட்டி பகுதிக்கான குடிநீர் வினியோகம் கணவாய்பட்டியிலிருந்து சப்ளையாகிறது. மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும். மயானத்திற்கு செல்ல பாதை வசதியின்றி ஆற்றுக்குள் இறங்கி நீண்ட துாரம் நடந்து கரை ஏறவேண்டியுள்ளது. மழை நேரத்தில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இங்குள்ள பள்ளியில் அகற்றப்பட்ட வகுப்பறைக்கு பதிலாக புதிய கட்டடத்தை விரைவில் கட்ட வேண்டும்.
சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
பி.கருப்பையா, விவசாயி, கணவாய்பட்டி: கணவாய்பட்டியிலிருந்து மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் நிலங்களுக்கு செல்லும் பாதை சேதமாக இருப்பதால் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையால் கணவாய்பட்டிக்கு செல்லும் ரோடும் பணியும் கிடப்பில் கிடக்கிறது. விஷ பூச்சிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.
தீர்வு காண முயற்சிக்கிறோம்
ஜி.சின்னச்சாமி, பேரூராட்சி கவுன்சிலர், குப்பாம்பட்டி: குப்பாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் இடிக்கப்பட்ட வகுப்பறைக்கு பதிலாக புதிய கட்டடம், சுகாதாரநிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறேன். அலைபேசி கோபுரம் இல்லாததால் சிரமங்கள் உள்ளது. தீர்வு காண தொடர்ந்து முயற்சிக்கிறோம். கணவாய்பட்டி ரோடு அமையாமல் தாமதம் ஏற்படுவதற்கு மக்களுக்குள் ஒற்றுமை இல்லாததே காரணம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கிறோம்.