/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாவட்டத்தில் 3 தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவியுங்க! 1000 அடிக்கு போர் போட்டும் புகைதான் வருது
/
திண்டுக்கல் மாவட்டத்தில் 3 தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவியுங்க! 1000 அடிக்கு போர் போட்டும் புகைதான் வருது
திண்டுக்கல் மாவட்டத்தில் 3 தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவியுங்க! 1000 அடிக்கு போர் போட்டும் புகைதான் வருது
திண்டுக்கல் மாவட்டத்தில் 3 தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவியுங்க! 1000 அடிக்கு போர் போட்டும் புகைதான் வருது
ADDED : ஏப் 23, 2024 06:36 AM

குஜிலியம்பாறை : திண்டுக்கல் மாவட்டத்தில் 1000 அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை . புகைதான் வருகிறது .இதை கருதி குஜிலியம்பாறை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய மூன்று தாலுகா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து போதிய சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குஜிலியம்பாறை, வேடசந்துார் தாலுகா பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான கிணறுகள் , போர்வெல்களில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக எந்த விவசாயத்தையும் செய்ய முடியாமல், இருக்கிற தென்னை மரங்களுக்கு மட்டுமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில் அந்த தண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. தென்னை மரங்களை கூட பாதுகாக்க முடியாமல், கண் முன்னே காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயம் பொய்த்துப் போன நிலையில் கால்நடைகளை வைத்தாவது வாழ்க்கையை நடத்தி விடலாம் என்றால், அதற்கும் போதிய தீவனம் இல்லை. இதனால் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஒரு கட்டு வைக்கோல் ரூ.250 என்ற அளவில் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
சிறிதளவு நீர்ப்பிடிப்புள்ள விவசாயிகள், முருங்கையை நட்டு பராமரிக்கும் நிலையில் அதற்கும் விலை இல்லை. இருக்கின்ற காசை வைத்து ஆயிரம் அடிக்கு போரை போட்டாலும் தண்ணீர் இல்லை. புகை தான் வருகிறது. நடப்பாண்டில் காவிரி ஆற்றிலும் தண்ணீர் இல்லாத நிலையில் அங்கிருந்து ராட்சத கிணறுகள் மூலம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கும் இன்னும் ஒரு சில மாதங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.
விவசாயம் பாழ்பட்டு போன நிலையில், கால்நடைகளையும் பார்க்க முடியாமல் அவற்றை குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் குஜிலியம்பாறை, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, நிலவரி , விவசாய கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
..............
சலுகைகளை வழங்குங்க
குஜிலியம்பாறை உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. காலை 11:00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. விவசாயம் அரவே இல்லை. இருக்கிற தென்னை மரங்களையும் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். கால்நடைகளை பாதுகாக்க மானிய விலையில் வைக்கோல் தீவனம் வழங்க வேண்டும். காவிரி ஆற்றிலேயே தண்ணீர் இல்லை. இனி காவிரிக் குடிநீரும் சில மாதங்களில் பற்றாக்குறை வந்து சேரும். தமிழக அரசு, குஜிலியம்பாறை, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தாலுகா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து போதிய சலுகைகளை வழங்க வேண்டும் .
ஏ.ராஜரத்தினம், மாவட்ட விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர், குஜிலியம்பாறை;

