/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வசதிகளில் பின்னடைவு; தவிக்கும் வாகன ஓட்டிகள்
/
வசதிகளில் பின்னடைவு; தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 12, 2025 05:08 AM

சின்னாளபட்டி : திண்டுக்கல்- மதுரை ரோட்டில் பயணிகள் வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதில் அலட்சியம் நீடிக்கிறது.
2011ல் செயல்பாட்டிற்கு வந்த திண்டுக்கல் -மதுரை நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் இருபுற ரோடுகளுக்கான சந்திப்பு மின்விளக்குகள், பஸ் ஸ்டாப் ஹைடெக் கூரை உட்பட ஏராளமான வசதிகள் இருந்தன. தற்போது இவைகள் கண்டுகொள்ளப்படாத நிலையில் ரோடு, கட்டண வசூல் செயல்பாட்டிற்கு வந்த பின்பும் பராமரிப்பில் தொய்வு அதிகரிக்கிறது. வாகன ஓட்டிகளுக்கான வசதிகளை அளிப்பதில் அலட்சியம் நீடிக்கிறது. அவ்வப்போது புல் செடி அகற்றுதல், ரோடுகளில் வர்ணப் பூச்சு போன்ற பணிகள் மட்டுமே பெயரளவில் நடக்கிறது.
வழித்தட கிராமங்களை சேர்ந்த பயணிகள், வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. வாகன ஓட்டிகளுக்கான வசதிகளை மீண்டும் ஏற்படுத்துவது மட்டுமின்றி,ரோடு பராமரிப்பில் அலட்சியத்தை களைய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.
வசூலில் ஆர்வம்
கார்த்திகேயன்,சமூக ஆர்வலர், பெருமாள்கோவில்பட்டி: வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
அதற்கேற்ற வசதிகளை ஏற்படுத்த முன் வருவதில்லை. ஏற்கனவே உள்ள வசதிகளை பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டுகின்றனர். ரோட்டோரங்கள், சென்டர் மீடியன் பகுதிகளில் அவ்வப்போது பெயரளவில் வர்ணம் பூசி சேதத்தை மறைக்கின்றனர். டூவீலர்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் கட்டுப்பாடு இழந்து விபத்துக்குள்ளாகின்றன.
எதிர்திசை பயணத்தால் பாதிப்பு
பத்மநாபன்,வியாபாரி, ஆலமரத்துப்பட்டி: பராமரிப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மக்களுக்கு வசதிகளை விட தொல்லைகளே அதிகம்.
திண்டுக்கல் துவங்கி கொடைரோடு வரை பல்வேறு குக்கிராம வழித்தடங்களுக்கான சர்வீஸ் ரோடு சந்திப்பில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் சென்டர் மீடியனை கடக்க எதிர் திசையில் பயணிக்கின்றனர்.
பிரச்னைகள் பல
பூங்காவனம்,குடும்பத்தலைவி, சின்னாளபட்டி: காந்திகிராமத்தில் போதிய தெருவிளக்கு வசதியின்றி இருள் சூழ்ந்த பகுதியில் பஸ் ஸ்டாப் உள்ளது. மாலை நேரங்களில் மாணவியர், மகளிர் ஊழியர்கள் இங்கு பஸ்சுக்காக காத்திருப்பதில் பல நடைமுறை பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இப்பகுதியில் காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்கூரை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் பெயரளவில் கூட இல்லை. திண்டுக்கல்- மதுரை ரோட்டில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் சந்திப்பு பகுதிகள் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளன.