UPDATED : நவ 21, 2026 11:00 PM
ADDED : நவ 21, 2026 10:58 PM
திண்டுக்கல்: ‘‘கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்கள் திரள வேண்டும்’’ என ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஹிந்து கோயில்களின் உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு தீபம் ஏற்றக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வாதாடுகிற ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்கு எதிராக செயல்படுகிறது. கோயில் நிலம், அவற்றின் உரிமைகளை அடமானம் வைக்கிற மாதிரி த.வெ.க., அரசும் தீபம் ஏற்றக்கூடாது எனக் கூறியிருப்பது கூட்டுச்சதி.
தி.மு.க., த.வெ.க., கம்யூ., கட்சிகள், ஹிந்து விரோத அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து முருக பக்தர்களுக்கு எதிராக கூட்டுச்சதி செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அந்த கூட்டுச்சதி இன்று முறியடிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 99 சதவீத மக்கள் எதை விரும்புகிறார்களோ அதுதான் தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் ஹிந்துக்களின் உரிமைகள் மீது யாரும் கை வைக்க முடியாது, கை வைக்கக் கூடாது என்பதை நீதித்துறையின் மூலம் பிரகடனப்படுத்தி உள்ளோம். திருப்பரங்குன்றத்திற்கு தீபத்திருநாள் அன்று மக்களும், பக்தர்களும் அலை அலையாய் செல்ல ஹிந்து முன்னணி அழைப்பு விடுகின்றது என்றார்.
