UPDATED : நவ 21, 2026 10:40 PM
ADDED : நவ 21, 2026 10:35 PM
பழநி:
பழநி நகராட்சி குப்பைக் கிடங்கில் உள்ள கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றும் பணிக்காக அண்ணா பல்கலை பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பழநி நகராட்சியின் 33 வார்டுகளில் தினமும் டன் கணக்கில் குப்பை சேகரமாகிறது. கோயில் விசேஷ நாட்களில் அதிக அளவில் குப்பை குவிகிறது. இதனை பெரியப்பா நகர் குப்பைக் கிடங்கில் சேகரித்து வருகின்றனர். அங்கு குப்பைக்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாக மக்கிய நிலையிலுள்ள கழிவுகளை அண்ணா பல்கலை உதவியுடன் பயோமைனிங் முறையில் அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக அண்ணா பல்கலையை சேர்ந்த தங்கராஜ் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
நகராட்சி கமிஷனர் ராஜலட்சுமி, சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வு செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று நடப்பட்டது.
