/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காமாட்சி அம்மன் கோயிலில் வசதிக்காக ஏங்கும் பக்தர்கள்
/
காமாட்சி அம்மன் கோயிலில் வசதிக்காக ஏங்கும் பக்தர்கள்
காமாட்சி அம்மன் கோயிலில் வசதிக்காக ஏங்கும் பக்தர்கள்
காமாட்சி அம்மன் கோயிலில் வசதிக்காக ஏங்கும் பக்தர்கள்
ADDED : ஏப் 08, 2025 05:01 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலாக ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.
இங்கு காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர், முருகன், பெருமாள், ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என பல விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
ஆனால் இவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லை. சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு பஸ்ஸ்டாண்ட்,வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
நீண்ட நேரம் இயற்கை உபாதைகளை அடக்குவதால் உடல்நிலை சோர்வடைகிறது. இங்கே மூன்றுக்கு மேற்பட்ட குருக்கள் பூஜை செய்து வருகின்றனர்.
இவர்களும் இயற்கை உபாதைகளை கழிக்க இடம் இன்றி தவித்து வருகின்றனர். கோயிலுக்கு பெண் பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். அனைவரும் பயன்படுத்தும் வகையில் இங்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைந்து நிறைவேற்றுங்க
விஸ்வரத்தினம், மாநிலத் தலைவர், தமிழக சிவ பக்தர்கள் குழு, ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகரின் மத்தியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப சகிதமாக வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இங்கு வரும் முதியோர்கள், பெண்கள் கழிப்பறை வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கழிப்பறை செல்ல வேண்டும் என்றால் ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் உடனடியாக இக்கோவிலின் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
பொள்ளாச்சி, ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகம் இணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகள் பெண்கள் அவதி
சுரேஷ்குமார், திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் தலைவர், ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் திருவிழாக்கள், பூஜைகளில் கலந்து கொள்ள வருபவர்கள் ஒரு சில மணி நேரங்கள் கோயிலில் இருக்க வேண்டி உள்ளது. அடிக்கடி ஆன்மிக சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளது.
இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பறை வசதி இல்லை.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்கு ஆளாக வேண்டி உள்ளது. குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தீர்வு
கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான கழிப்பறை வசதி ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இதுவரை ஏற்படுத்தவில்லை. இதனால் கோயிலுக்கு வரும் சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள், குருக்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவது தொடர் கதையாக உள்ளது.
கோயில் வளாகத்தில் இட நெருக்கடி என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இக்கோயில் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு இடம் காலியாக உள்ளது.
இப்பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தலாம். ஆன்மிக பக்தர்களின் எதிர்பார்ப்பை கோயில் நிர்வாகம் விரைந்து பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.