/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.54 கோடி வரி பாக்கி
/
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.54 கோடி வரி பாக்கி
ADDED : ஜன 25, 2025 02:09 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சிக்கு வர வேண்டிய ரூ.54 கோடி வரியை முறையாக வசூலிக்காத 15 வருவாய்த்துறை அலுவலர்களுக்கு 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது. வரிபாக்கியை செலுத்த தபால் கார்டு, அலைபேசியில் எஸ்.எம்.எஸ்., அனுப்ப மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இம்மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. வீட்டு வரி, சொத்து வரி, பாதாள சாக்கடை, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை குடியிருப்போர், தொழில் நிறுவனத்தினர் மாநகராட்சிக்கு செலுத்துவர்.
இதை மாதமாதம் செலுத்த வேண்டும். நடப்பு நிதியாண்டுக்கான கணக்கு மார்ச்சில் முடிய உள்ள நிலையில் ஏராளமானோர் முறையாக வரி செலுத்தவில்லை.
இதனால் சொத்துவரி ரூ.21 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.14 கோடி, வாடகை ரூ.8.78 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ.3 கோடி என ரூ.54 கோடி வரை மாநகராட்சிக்கு பாக்கி உள்ளது.
இதை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் 16 குழுக்களை நியமித்து விரைந்து வசூலிக்கவும் நடவடிக்கை எடுத்தது. இருந்த போதிலும் வரி வசூல் முழுமையாக நடக்கவில்லை. விசாரணையில் சில அலுவலர்கள் வரிவசூலில் சுணக்கமாக இருந்தது தெரிந்தது.
இதையடுத்து முறையாக வரி வசூலிக்காத வருவாய்த்துறை அலுவலர்கள் 15 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் 'மெமோ' வழங்கியுள்ளது.
வரி வசூலை அதிகரிக்க தபால் துறை மூலம் வரி செலுத்தாதவர்களின் முகவரிகளுக்கு தபால் கார்டு, அலைபேசிகளுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.