ADDED : செப் 30, 2011 11:16 PM
திண்டுக்கல் : ''திண்டுக்கல் ஒன்றியம் 7 வது வார்டில் பெண்கள் சுயதொழில் செய்யவும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவும் முயற்சி செய்வேன்,'' என, காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுரேஷ் கூறினார்.சீலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அபிராமிநகர், காந்திஜிநகர் பகுதிகளில் அவர் பேசியது: இப்பகுதியில் ரோடு, மழையில் கரைந்து காணாமல் போய்விட்டது.
கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யாமல் உள்ளது. குப்பை வண்டிகள் வந்து பல நாட்களாகிறது. பல இடங்களில் குப்பை தொட்டி இல்லாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். இவற்றை போக்க, ஆங்காங்கே குப்பை தொ ட்டி அமைக்கப்படும். தரமான ரோடு அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். மழைநீர் தேங்காமல் குளங்கள், கால்வாய்களில் சேர்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். குடிநீர் பல நாட்களுக்கு பிறகு தான் வருகிறது. முறையாக வினியோகம் செய்யாததால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் காவிரி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன். மேலும், 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படும். பல இடங்களில் மின் விளக்குள் எரியாததால், தொடர் திருட்டும், பெண்களிடம் நகை பறிப்பும் நடக்கிறது. சோடியம் மின் விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்வேன். என்.ஜி.ஓ., காலனி அருகே ராஜா குளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களின் உற்பத்தியும் அதிகம். இந்த குளத்தை தூர் வாரி, வேலி அமைத்து, சுற்றி பூங்கா அமைக்கப்படும். வார்டுக்கு உட்பட்ட பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் சுய தொழில், குடிசை தொழில் செய்வதற்கு கடன் வாங்கித்தரப்படும். உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தவும் ஆலோசனை வழங்கப்படும். கல்விக் கடன் வாங்க உதவிகளும், மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் அனைவரும் வேலை பெறுவதற்கும் வழிவகை செய்யப்படும். சீலப்பாடி ஊராட்சி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபடுவேன். எந்த நேரமும் என்னிடம் தொடர்பு கொள்ளலாம். உங்கள் நண்பனாக, தொண்டானாக பணியாற்றுவேன், என்றார்.