ADDED : ஆக 25, 2026 04:41 PM
திண்டுக்கல், ஆக.26-
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெயந்தி, ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பங்கேற்று பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் அண்டை மாநிலங்களான ஆந்திராவில் ரூ.15 ஆயிரம், தெலுங்கானாவில் ரூ.4 ஆயிரத்து 16, பாண்டிச்சேரியில் ரூ.3 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் ரூ.1,500 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, ஆத்துார் உள்பட மாவட்டத்தில் 10 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
