/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மேகமூட்டம் உருவாகியும் மழை பொய்த்ததால் ஏமாற்றம்! விவசாயம் செய்ய முடியாது தவிக்கும் விவசாயிகள்
/
மேகமூட்டம் உருவாகியும் மழை பொய்த்ததால் ஏமாற்றம்! விவசாயம் செய்ய முடியாது தவிக்கும் விவசாயிகள்
மேகமூட்டம் உருவாகியும் மழை பொய்த்ததால் ஏமாற்றம்! விவசாயம் செய்ய முடியாது தவிக்கும் விவசாயிகள்
மேகமூட்டம் உருவாகியும் மழை பொய்த்ததால் ஏமாற்றம்! விவசாயம் செய்ய முடியாது தவிக்கும் விவசாயிகள்
ADDED : ஆக 19, 2025 01:06 AM

பட்டிவீரன்பட்டி; திண்டுக்கல் மாவட்டத்தில் வெப்பச்சலனம், தென்மேற்கு பருவ மழை, காற்றழுத்த தாழ்வு ஆகியவற்றால் மழை கிடைக்கும் என வானிலை அறிவிப்புகள் அவ்வப்போது தெரிவித்தாலும் வெற்று மேக கூட்டத்துடன் ஒவ்வொரு நாளும் கழிவதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து நெல் சாகுபடியை துவக்க தயங்குகின்றனர்.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மட்டுமே சமவெளிப் பகுதிகளில் கை கொடுக்கும். தென்மேற்கு பருவமழை கொடைக்கானல், சிறுமலை உள்ளிட்ட மலை பிரதேசங்கள் அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சி அடைய செய்யும். ஆனால் காலநிலை மாற்றத்தால் தென்மேற்கு பருவமழை சீசனில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்டத்திற்கு மழை கிடைத்தது. அதேபோன்று இந்த ஆண்டும் கிடைக்கும் என விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் கோடை காலத்தை விட வெயில் பல இடங்களில் சுட்டெரிக்கிறது. அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்தாலும் பூமி குளிர்ச்சி அடைவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
மாவட்டத்தில் பாலாறு, பரப்பலாறு, குதிரையாறு, நங்கஞ்சி ஆறு, குடகனாறு, சிறுமலையாறு, வரதமாநதி, காமராஜர் நீர்த்தேக்கம் மருதாநதி ஆகிய அணைகள் உள்ளன. இது தவிர தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு வைகை அணை மூலமும் திண்டுக்கல் மாவட்டம் பயனடைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் அணையின் பாதி அளவுகள் கூட தண்ணீர் இல்லை. விவசாயிகள் நெல் சாகுபடி துவக்காமல் உள்ளனர். வைகை ஆற்று பாசனத்தில் மட்டும் நெல் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று பாசனத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால் விவசாயம் பரப்பளவு குறைந்து வருகிறது.
........................
பாசனப்பரப்பு குறைகிறது
வானிலை மையங்கள் கூறும் அளவிற்கு மழைப்பொழிவு இல்லை. மாவட்டத்திற்கு என சரியான வானிலை அறிக்கை கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த காலங்களை விட மழை பொழிவு குறைவாக உள்ளதால் பாசனப்பரப்பு குறைந்து உள்ளது. கிணற்று பாசன பரப்பும் குறைந்துவிட்டது. தென்மேற்கு பருவமழை சீசனும் முடியும் தருவாயில் இருப்பதாக வானிலை மையங்கள் தெரிவிக்கும் நிலையில் மழை பொழிவுக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
கண்ணன், விவசாயி, பட்டிவீரன்பட்டி.
.................