ADDED : ஜன 09, 2026 06:07 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நர்சுகளுக்கான துறை மாறுதல் பணி இடஒதுக்கீடு பாரபட்சத்துடன் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நர்சுகள் தினசரி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்படும். கண்காணிப்பு அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றம் வெளிப்படைத்தன்மையோடு நடப்பதில்லை என நர்சுகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கண்காணிப்பு அலுவலர்களுக்கு வேண்டியவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக செயல்படும் நர்சுகளுக்கு இடம் மாற்றம் அளிக்காமல் அவர்கள் பணிபுரியும் இடத்திலே மீண்டும் பணி ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர். பிடிக்காத நபர்கள், அவர்களுக்கு வளைந்து கொடுக்காத நர்சுகளுக்கு கட்டாய இடமாற்றத்தின் பெயரில் கடினமான துறைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் மூத்த நர்சுகள் கூட பாதிக்கின்றனர்.
இந்தாண்டும் துறை மாறுதல் பணி பாரபட்சத்துடன் ஒதுக்கப் பட்டுள்ளது.
மருத்துவக்கல்லுாரி முதல்வர், கண்காணிப்பு அலுவலர்கள் தலையிட்டு நர்சுகளுக்கான துறை மாறுதல் பணி ஒதுக்கீடு நியாயமான முறையில் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

