/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., வினர் அராஜகம், குப்பை கிடங்கை மாற்றுங்க குறைதீர் கூட்டத்தில் பலர் முறையீடு
/
தி.மு.க., வினர் அராஜகம், குப்பை கிடங்கை மாற்றுங்க குறைதீர் கூட்டத்தில் பலர் முறையீடு
தி.மு.க., வினர் அராஜகம், குப்பை கிடங்கை மாற்றுங்க குறைதீர் கூட்டத்தில் பலர் முறையீடு
தி.மு.க., வினர் அராஜகம், குப்பை கிடங்கை மாற்றுங்க குறைதீர் கூட்டத்தில் பலர் முறையீடு
ADDED : ஜூலை 15, 2025 04:05 AM

திண்டுக்கல்: தி.மு.க., வினர் அராஜகம், குப்பை கிடங்கை இடம் மாற்றுங்க என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல்லில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பலரும் முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தஇக்கூட்டத்தில் 328 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் மாணவர் பிரகாஷ் திண்டுக்கல் சில்வார்பட்டி கிணற்றில் மூழ்கி இறந்ததையடுத்து அவருடைய தாய் கலைச்செல்விக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையை கலெக்டர் வழங்கினார்.டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) செந்தில்வேல், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் இளங்கோ கலந்துகொண்டனர்.
தி.மு.க., வினர் அராஜகம்
அ.தி.மு.க., மாணவரணி துணைச்செயலர் கண்ணன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், கன்னிவாடி புதுப்பட்டி பகுதியில் தான் சார்ந்த கட்சி அலுவலகம், கொடிக்கம்பம் அமைக்க அதேபகுதியைச் சேரந்த சசிகலா காலியிடத்தை கிரையம் செய்தேன். அன்று இரவு தி.மு.க., வைச் சேர்ந்த சிலர் தி.மு.க., கொடிகம்பத்தை நட்டு சென்றுள்ளனர். எங்கள் கட்சிக்கு இடத்தை எழுதித்தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என கொலைமிரட்டல் விடுத்தனர். போலீசார் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
குப்பை கிடங்கை மாற்றுங்க
நாம் தமிழர் கட்சியினர் அளித்த மனுவில், திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் குப்பை கிடங்கில் மருத்துவக் கழிவுகளை கொட்டப்படுகிறது. வாகனங்களை சிறை பிடித்து போராட்டமும் நடத்தினோம். இந்த குப்பை கிடங்கு அருகே பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் நோய் தொற்று , சுவாச பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என குறிப்பட்டிருந்தனர்.
அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், மாவட்டத்தில் 2 ஆயிரம் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். வருடத்தில் 5 நாட்கள் மட்டுமே இந்த தொழிலில் வருமானம் உள்ளது. மற்ற நாட்களில் உணவிற்கே சிரமப்படும் நிலை உள்ளது. பெரும்பாலானோர் வீடுவாசல் இன்றி வாடகை வீடுகளில் உள்ளனர். நலிவுற்ற கலைஞர்களை கண்டறிந்து இலவச வீடு வழங்கவும், சங்க அலுவலகத்திற்கு இடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.