/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காரில் கடத்தி பாலியல் தொல்லை என கூறிய தேனி மாவட்ட மாணவியின் நாடகம் அம்பலம்
/
காரில் கடத்தி பாலியல் தொல்லை என கூறிய தேனி மாவட்ட மாணவியின் நாடகம் அம்பலம்
காரில் கடத்தி பாலியல் தொல்லை என கூறிய தேனி மாவட்ட மாணவியின் நாடகம் அம்பலம்
காரில் கடத்தி பாலியல் தொல்லை என கூறிய தேனி மாவட்ட மாணவியின் நாடகம் அம்பலம்
ADDED : செப் 25, 2024 01:27 AM
திண்டுக்கல்:கேரளாவை பூர்வீகமாக கொண்ட, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது நர்சிங் மாணவி, நேற்று முன்தினம், தேனி பஸ் ஸ்டாண்டில் நின்ற போது, பெண் உட்பட ஏழு பேர் கும்பல் காரில் கடத்தியதாகவும், வழியில் பாலியல் தொல்லை கொடுத்தனர் எனவும் திண்டுக்கல் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
பரிசோதனை
இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, எஸ்.ஐ., வனிதா மற்றும் போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். டாக்டர்களும் மாணவியை பரிசோதித்தனர். எந்த தவறும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின், திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் வந்து அந்த மாணவியிடம் விசாரித்தார். அவரிடமும் அந்த மாணவி முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்ததால், போலீசார் சந்தேகமடைந்தனர்.
அந்த மாணவி தேனி மாவட்டத்திலுள்ள அவரது ஊரில், வீட்டிலிருந்து வெளியே வந்ததில் இருந்து திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன், மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தது வரை உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதிலும், அந்த மாணவியை யாரும் கடத்தியதாக பதிவுகள் இல்லை.
மேலும், அந்த மாணவி, தேனி பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று முன்தினம் காலை அரசு பஸ்சில் ஏறி, திண்டுக்கல் வந்து இறங்கியதும், அங்கிருந்து பஸ் மூலம் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்ததும், பின், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆட்டோ மூலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்ததும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது.
மாணவி பயணித்த அரசு பஸ் கண்டக்டர்கள், ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போதும், அந்த மாணவி கடத்தப்பட்டதாக தெரியவில்லை.
மன அழுத்தம்
மாணவியின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் மன அழுத்தத்திலிருந்த அவர், பொய்யான தகவலை கூறி, போலீசாரை அலைக்கழித்தது தெரிந்தது.
எஸ்.பி., பிரதீப் கூறியதாவது:
குடும்ப பிரச்னையால் மன அழுத்தத்தில் மாணவி பொய் புகார் கூறியது அம்பலமாகியுள்ளது. அவர் தன் பெற்றோரிடம், அலைபேசியில், 'மர்ம நபர்கள் என்னை காரில் கடத்தி செல்கின்றனர்' என கூறியுள்ளார்.
பதறிய பெற்றோர் அளித்த புகாரின்படி, தேனி மாவட்ட போலீசார் மாணவி மாயம் என வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் மகளிர் போலீசில் மாணவி கொடுத்த புகாரிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மாணவி செய்த தவறை தற்போது உணர்ந்துள்ளதால், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.