/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதிய மழையின்றி வறண்ட நீர்நிலைகளால்...பாதிப்பு:மார்ச், ஏப்ரலில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
/
போதிய மழையின்றி வறண்ட நீர்நிலைகளால்...பாதிப்பு:மார்ச், ஏப்ரலில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
போதிய மழையின்றி வறண்ட நீர்நிலைகளால்...பாதிப்பு:மார்ச், ஏப்ரலில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
போதிய மழையின்றி வறண்ட நீர்நிலைகளால்...பாதிப்பு:மார்ச், ஏப்ரலில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
ADDED : டிச 03, 2025 07:06 AM

குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய பருவமழை இல்லாததால் கிணறுகள் போர்வெல்கள் மட்டுமின்றி குளங்களுக்கு கூட நீர் வரத்து அறவே இல்லை. இதே நிலை நீடித்தால் மார்ச்சில் கடும் வரட்சி, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் பெரும்பாலான நிலங்கள் மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்யக்கூடிய மானாவாரி நிலங்களாகவே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பட்டத்தில் கம்பு, சோளம், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர் வகைகளை பயிர் செய்யும் விவசாயிகள் அந்த ஆண்டுக்கான வருவாயகவும்,கால்நடைகளுக்கான தீவனங்களையும் பெற்று வந்தனர்.
ஆனால் நடப்பு ஆண்டில் ஆடி பட்டம் (ஆகஸ்ட், செப்டம்பர்) மழை இன்றி பொய்த்துப் போனது. ஆர்வத்துடன் விதை பொருட்களை வாங்கிய விவசாயிகள் மழை இல்லாததால் மீண்டும் கடைகளுக்கே கொண்டு சென்று விற்றனர்.
நிலைமை இவ்வாறு இருக்க அக்டோபர், நவம்பரில் கூடுதலான மழை பெய்து கிணறுகள், போர்வெல்கள், குளங்கள் நிறைந்து விடுமென காத்திருந்த விவசாயி களுக்கு மீண்டும் அதிர்ச்சியே ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை, புயல் என அரசு அறிவித்தாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெரியளவில் பெய்யவில்லை. புயல் என அறிவித்த நாட்களில் லேசான துாறல் மட்டுமே நாள் முழுவதும் விழுந்தது. மழைநீர் எங்கும் வழிந்து கூட ஓடவில்லை.
இதையெல்லாம் கவனத்தில் கொள்ளும் விவசாயிகள் நடப்பு ஆண்டில் போதிய பருவ மழை இல்லாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் இரு மாதங்களில் கடும் வறட்சி நீடிக்கும்.
அப்போது குடிநீர் தட்டுப்பாடு ஆடு, மாடுகளை கூட வளர்க்க முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். தீபம் வர உள்ள நிலையில் விவசாயிகள் இன்னும் மழையை எதிர்பார்த்தே காத்திருக்கின்றனர்.
அனைத்தும் கனவாகிவிட்டது
இந்தாண்டு பருவ மழை பொய்த்து விட்டது. மானாவாரி விவசாயத்தை நம்பிய விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 700, 900 அடிக்கு போர்வெல் போட்டு கொண்டிருந்தவர்கள் தற்போது 1200 அடி போர் போட்டாலும் தண்ணீர் இல்லை. இலங்கையில் மையம் கொண்ட புயலால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதல் மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. அனைத்தும் கனவாகிவிட்டது.மழை காலம் முடிய உள்ள நிலையில் போதிய மழை பெய்யாததால் குளங்கள், போர்வெல்கள், கிணறுகளுக்கு நீர் வரத்து அறவே இல்லை. இதே நிலை நீடித்தால் இரு மாதங்களில் கடும் வறட்சி நீடிக்கும். விலைவாசி உயரும். கால்நடைகளை கூட கவனிக்க முடியாமல் விற்கும் நிலை ஏற்படும்.
-ஜி.ஆர்.ராஜகோபால், குடகனாறு அணை நீர் பாசன சங்க தலைவர், திருக்கூர்ணம்.

