/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எழும்பள்ளம் குளம் வாய்க்கால் சேதம்
/
எழும்பள்ளம் குளம் வாய்க்கால் சேதம்
ADDED : ஆக 02, 2025 01:21 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனுாரில் உள்ள எழும்பள்ளம் குளத்தில் தண்ணீர் இருந்தும் பாசன வாய்க்கால் சேதம் அடைந்ததால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக உள்ள நிலையில் இங்குள்ள மன்னவனுார் எழும்பள்ளம் குளம் சூழல் சுற்றுலா மையப் பகுதியில் அமைந்துள்ளது. 10 ஏக்கரில் உள்ள இக்குளம் மூலம் நேரடியாக 500 ஏக்கர், மறைமுகமாக 500 ஏக்கர் என ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம், குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது. இச்சூழலில் சில ஆண்டுகளுக்கு முன் ரூ. 1.37 கோடி மதிப்பில் குளம் பராமரிக்கப்பட்டது.
இக்குளத்தில் தேங்கும் நீர் ஆதார மூலம் காய்கறி பயிர்கள் உள்ளிட்ட இதர விவசாய பயிர்கள் பயன் பெற்று வந்தன.
உபரி நீர் வெளியேற்றத்தின் போது ஏற்பட்ட பள்ளத்தால் குளம் முதல் வேலிக்காட்டு குளம் இடையே 4 கி. மீ., வாய்க்கால் சேதமடைந்து தண்ணீர் சரிவர செல்லாமல் வீணாகிறது. இதனால் விவசாய பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இதையடுத்து விவசாயிகள் 4.கி.மீ., வாய்க்காலை கான்கிரீட் அமைத்து நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது தண்ணீர் இருந்தும் இக்குளம் மூலம் விவசாயிகள் பயனடையாத அவலம் நீடிக்கிறது. பற்றாக்குறையாக ஷட்டர் சேதமடைந்து தண்ணீர் திறக்க முடியாமல் விவசாயிகள் தற்காலிகமாக புவி ஈர்ப்பு விசையின் மூலம் தண்ணீரை பைப் மூலம் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடவடிக்கை இல்லை விவேகானந்தன், விவசாயி: எழும்பள்ளம் குளம் மூலம் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பொதுப்பணித்துறை வசம் உள்ள இக்குளம் சில ஆண்டுகளுக்கு முன் ரூ. 1.37 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இருந்த போதும் பாசன வாய்க்கால்கள் சேதம் அடைந்து சரிவர தண்ணீர் செல்லாத நிலையில் விவசாய பயிர்கள் பாதித்து வருகிறது. அவ்வப்போது விவசாயிகள் வாய்க்கால்களை சொந்த செலவில் சீரமைத்து தண்ணீரை கொண்டு செல்லும் நிலை உள்ளது.
இதை தவிர்க்க பொதுப்பணித்துறை 4. கி.மீ., தொலைவிற்கு கான்கிரீட் வாய்க்காய் அமைத்து தண்ணீர் திறந்து விட மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் எழும்பள்ளம் குளத்தில் கோடை காலத்தில் நீர் பாசன வாசதியை முறையாக பயன்படுத்த கான்கிரீட் வாய்க்காலை துரிதமாக அமைக்க வேண்டும். எழும்பள்ளம் குளத்தின் ஷட்டர் சேதமடைந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை பொதுப்பணித்துறை தொடர்ந்து புறக் கணித்து வருகிறது.
தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் விவசாய பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது.
துரிதகரியில் ஷட்டரை சீரமைத்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பாசன வாய்க்காலை தற்காலிகமாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.