/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல்வர் தொடங்கி வைத்த மின்வாரிய அலுவலகம் பயன்பாட்டிற்கு வரவில்லை காந்திராஜன் எம்.எல்.ஏ., காட்டம்
/
முதல்வர் தொடங்கி வைத்த மின்வாரிய அலுவலகம் பயன்பாட்டிற்கு வரவில்லை காந்திராஜன் எம்.எல்.ஏ., காட்டம்
முதல்வர் தொடங்கி வைத்த மின்வாரிய அலுவலகம் பயன்பாட்டிற்கு வரவில்லை காந்திராஜன் எம்.எல்.ஏ., காட்டம்
முதல்வர் தொடங்கி வைத்த மின்வாரிய அலுவலகம் பயன்பாட்டிற்கு வரவில்லை காந்திராஜன் எம்.எல்.ஏ., காட்டம்
ADDED : நவ 22, 2024 05:02 AM
திண்டுக்கல்: ''வேடசந்துார் மின் வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை 2022ல் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த அலுவலகம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை''என வேடசந்துார் காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட வளர்ச்சி,ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு,கண்காணிப்பு குழுவின் 2024--25- நிதியாண்டிற்கான 3ம் காலாண்டிற்கான கூட்டம் நேற்று நடந்தது.
சச்சிதானந்தம் எம்.பி., தலைமை வகித்தார். கலெக்டர் பூங்கொடி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., காந்திராஜன், மேயர் இளமதி பங்கேற்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி(எஸ்.எஸ்.ஏ), பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், பாரம்பரிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னேற்றம்,செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு துறை அலுவலர்களும் எடுத்துரைத்தனர்.
சச்சிதானந்தம் எம்.பி.,: பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கோபால்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 க்கு மேற்பட்ட வகுப்பறைகளில் மழைநீர் ஒழுகும் நிலை உள்ளது. மைதானங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
முதன்மை கல்வி அலுவலர் உஷா : பொதுப் பணித் துறை மூலம் பராமரிப்பு நிதி மூலம் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல் ஊரக வளர்ச்சித் துறை மூலம் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் சீரமைக்கப்படும்.
சச்சிதானந்தம் எம்.பி.,: ஒவ்வொரு பள்ளிக்கும் என்ன தேவை என்பதை பட்டியிலிட்டு மாவட்ட வளர்ச்சிக்கு கூட்டத்திற்கு அளித்திடுங்கள். அரசு,தனியார் மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை என்ன.
தேசிய சுகாதார குழும அதிகாரிகள்: நடப்பாண்டில் நடைபெற்ற 8722 மகப்பேறுகளில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5381, தனியார் மருத்துவமனைகளில் 2891 பிரசவங்கள் நடந்தது.
காந்திராஜன் எம்.எல்.ஏ.,: வேடசந்துார் மின் வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை 2022ம் ஆண்டு காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். அந்த அலுவலகம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
கலெக்டர் பூங்கொடி: அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்திராஜன் எம்.எல்.ஏ.,: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், பணித் தள பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இருப்பதால், குறிப்பிட்ட நபர்களுக்கே 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி: அரசின் விதிகளுக்குள்பட்ட பணித் தள பொறுப்பாளர்கள் தொடர்பான புகார்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேயர் இளமதி : நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் பணிகள் 3 மாதங்களாக நடக்கவில்லை. தொழிலாளர்கள் வேலை கேட்கின்றனர்.
காந்திராஜன் எம்.எல்.ஏ.,: கிராம சாலைகள் திட்டத்தின்படி வாகனங்களே செல்லாத பகுதிகளுக்கெல்லாம் ரோடு போடுகிறீர்கள். மக்கள் பயன்படுத்தும் பகுதிகளை பெரிதாக கண்டுகொள்வதில்லை.
சச்சிதானந்தம் எம்.பி.,: முருகபவனம் குப்பை கிடங்கில் சுத்தம் செய்யும் பணி நடக்கிதென்றால், மேலும் குப்பையை கொட்டாதீர்கள், சிலர் தீ வைப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் : முருகபவனம் குப்பை கிடங்கு குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.