/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
45 ஆண்டாக இல்லாத யானை தொல்லை தற்போது அதிகரிப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறை மீது குற்றச்சாட்டு
/
45 ஆண்டாக இல்லாத யானை தொல்லை தற்போது அதிகரிப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறை மீது குற்றச்சாட்டு
45 ஆண்டாக இல்லாத யானை தொல்லை தற்போது அதிகரிப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறை மீது குற்றச்சாட்டு
45 ஆண்டாக இல்லாத யானை தொல்லை தற்போது அதிகரிப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறை மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 26, 2025 04:03 AM

திண்டுக்கல்: ''மாவட்டத்தில் 45 ஆண்டுகளாக இல்லாத யானை தொல்லை தற்போது அதிகரித்து விட்டதாக'' திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வனத்துறை மீது விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் பாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காயத்ரி, நேர்முக உதவியாளர்(வேளாண்மை) நாகேந்திரன் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குளங்களை துார்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும், மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும், வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். மா விற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் மனுக்கள் அளித்தனர். துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
விவசாயிகள் விவாதம் ஜோசப், பஞ்சம்பட்டி: திண்டுக்கல்லையொட்டி வெள்ளேடு சிறுநாயக்கன்பட்டி குளம், பெரியகுளம் உள்ளிட்டவற்றில் அதிகளவில் மண் அள்ளப்பட்டு பள்ளமாகிவிட்டது. குளங்களை மீட்டெடுத்தால் மட்டுமே விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
நல்லசாமி, ஒட்டன்சத்திரம் : சின்னகுளம் குளத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது.
கலெக்டர் : அதற்கான திட்டமிடல் தயாராகிக்கொண்டிருக்கிறது. சரிசெய்யப்படும்.
செல்வம், தும்பலப்பட்டி: மஞ்சளாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளிமுத்து, ஒட்டன்சத்திரம்: அம்பிளிக்கை தேவத்துார் சொசைட்டியில் பயிர் கடன் வழங்க மறுக்கின்றனர்.
கலெக்டர் : பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கவேல் ,தங்கமாபட்டி : வெங்காய பட்டறை விரிவாக்கம் செய்ய வேண்டும். தங்கமாபட்டி தங்கம்மாள் குளத்தை தூர்வாரி அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
கலெக்டர் : குளத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெருமாள், ஒட்டன்சத்திரம் : மாவட்டத்தில் மலையை ஒட்டிய கிராமங்களில் யானைகள் அட்டகாசம் உள்ளது. பல ஏக்கர் பயிர்கள் வீணாகிறது. வனத்துறையினர் கும்கி யானைகள் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.
ராமசாமி, தொப்பம்பட்டி: மா விளைச்சல் அதிகமானதால் கொள்முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இழப்பு அதிகம். தற்போது விவசாயிகள் மரங்களை வெட்டி வருகின்றனர். இதுவரை இழப்பீடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடகனாறு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
துணை இயக்குநர், தோட்டக்கலை : மா மரத்திற்கு இழப்பீடு பெற அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
செபஸ்தியார், குட்டத்துப்பட்டி: மயிலாப்பூர் வண்டிப்பாதையில் ரோடு அமைத்து தரவேண்டும். சுற்றிய 4 கிராமங்களில் கால்நடைகள் அதிகம் உள்ளதால் கிளை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
சென்னமுத்து, ஒட்டன்சத்திரம் : பருகாலத்திற்கு முன்பாக விதை, உரம் மானியங்கள் குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடத்திட வேண்டும்.
சக்திவேல், ஆயக்குடி: யானைகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. பொதுமக்களும் தினமும் அச்சத்தோடு இருக்கின்றனர். 45 ஆண்டுகளாக இந்த தொல்லை இல்லை. சமீபமாகத்தான் அதிகரித்துள்ளது. வனத்துறை அலட்சியப்போக்கோடு செயல்படுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.
பாத்திமா ராஜரத்திரனம், பஞ்சம்பட்டி : புல்வெட்டி கண்மாயிலிருந்து நீரை பஞ்சம்பட்டிக்கு கொண்டு வர வேண்டும்.

