/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெயரளவில் 4 வழிச்சாலை விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்புகள், நெரிசலில் சிக்கி தவிக்கும் செம்பட்டி
/
பெயரளவில் 4 வழிச்சாலை விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்புகள், நெரிசலில் சிக்கி தவிக்கும் செம்பட்டி
பெயரளவில் 4 வழிச்சாலை விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்புகள், நெரிசலில் சிக்கி தவிக்கும் செம்பட்டி
பெயரளவில் 4 வழிச்சாலை விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்புகள், நெரிசலில் சிக்கி தவிக்கும் செம்பட்டி
ADDED : மே 25, 2025 04:48 AM

செம்பட்டி : செம்பட்டியில் பெயரளவில் மட்டுமே நடந்த 4 வழிச்சாலை விரிவாக்க பணியால் வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்ல முடியாத அவலம் தொடர்கிறது. இதோடு ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
காமலாபுரம் - -மூலச்சத்திரம் இடையே புதிய 4 வழிச்சாலை அமைக்கும் பணி பல மாதங்களாக நடக்கிறது. செம்பட்டி, தருமத்துப்பட்டி, கன்னிவாடி தடத்திலான ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தற்போது வரை பழைய வழித்தடத்தில் வாகன போக்குவரத்து நீடிக்கிறது. இத்தடத்தை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணி 4 ஆண்டுகளுக்கு முன் துவங்கி 2 ஆண்டுகளாக நடந்தது.செம்பட்டி வழியே மதுரை, தேனி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கென தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சுற்றிய 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வெளியூர்களுக்கு செல்ல செம்பட்டி வரவேண்டியுள்ளது.
இருப்பினும் பயணிகள் காத்திருப்பதற்கென போதிய இட வசதி இல்லை. பஸ் ஸ்டாண்டின் உள்புறம் மட்டுமின்றி வெளிப்புற ஸ்டாப்பில் உள்ள நிழற்கூடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன.இதனால் பயணிகள் திறந்தவெளியில் காத்திருக்கின்றனர்.
பணிகளில் பாரபட்சம்
4 வழிச்சாலை விரிவாக்கத்திலும் பெயரளவில் மட்டுமே பணிகள் நடந்தது. ரவுண்டானா முதல் ரோட்டின் 4 புறங்களிலும் விரிவுபடுத்தலில் அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். அரசியல், செல்வாக்கு காரணமாக 2 கிலோமீட்டர் துாரத்திற்கு விரிவாக்க பணிகளில் பாரபட்சமாக இருந்தது. ரோட்டின் பெரும் பகுதிகளில் கடைகளுக்கான பொருட்களை திறந்தவெளியில் வைத்துள்ளனர். குடியிருப்புகளுக்கான நீட்டிப்பு அறைகள் என ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத அவலநிலைக்கு, ரோடு விரிவாக்கத்திற்கு பின்பும் தீர்வு கிடைக்காமல் நெரிசல் மட்டுமே அதிகரித்து வருகிறது.
காத்திருக்கும் நிலை
வார விடுமுறை நாட்கள், தினமும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது. போலீசாரும் பாராமுகமாக இருப்பதால் வெளியூர் வாகன ஓட்டிகள், அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. இதன் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.