ADDED : ஜன 23, 2025 04:41 AM
ஆத்துார்: ஆத்துார் தாலுகாவில் கிராமம் வாரியாக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உங்களைத் தேடி உங்கள் ஊரில் குறை கேட்பு முகாம்நடந்தது.
இவற்றுக்கான அரசு துறை நடவடிக்கைகள் குறித்த கள ஆய்வு முகாம் ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.
வீரக்கல் ஊராட்சியில் பயன்பாட்டிற்கு வராத சேமிப்பு கிட்டங்கி, பித்தளைப்பட்டி பள்ளி அருகே மின் டிரான்ஸ்பார்மரால் பாதுகாப்பற்ற சூழல், ஜாதிக்கவுண்டன்பட்டி தொப்பம்பட்டியில் பள்ளி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளில் தளவாடங்களை பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருத்தல், கீழக்கோட்டை வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு நிரந்தர கட்டட வசதி இல்லாதது, முன்னிலைக்கோட்டை ஆரியநல்லூரில் தனியார் அரசு உதவிப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி போன்ற பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
ஆதிலட்சுமிபுரம் அங்கன்வாடி மையம், எஸ்.பாறைப்பட்டி தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் மாணவர்களின் கற்றல் அடைவு, வாசிப்பு திறன், கற்பித்தல் உபகரண பயன்பாடு, காலை, மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
திட்ட இயக்குனர் திலகவதி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சதீஷ்பாபு, ஆர்.டி.ஓ., சக்திவேல், தாசில்தார் முத்துமுருகன் பங்கேற்றனர்.

