/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்மாயில் கழிவு; குடிநீர் வழங்கலில் அலட்சியம் டி.புதுப்பட்டி ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
/
கண்மாயில் கழிவு; குடிநீர் வழங்கலில் அலட்சியம் டி.புதுப்பட்டி ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
கண்மாயில் கழிவு; குடிநீர் வழங்கலில் அலட்சியம் டி.புதுப்பட்டி ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
கண்மாயில் கழிவு; குடிநீர் வழங்கலில் அலட்சியம் டி.புதுப்பட்டி ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
ADDED : மார் 03, 2024 06:25 AM

கன்னிவாடி: ரோடு, கண்மாய்களில் கழிவுகள் குவிப்பு, ஆக்கிரமிப்புகளால் துார்ந்த வரத்து வாய்க்கால், தெருக்களில் தேங்கும் அசுத்த நீர், குடிநீர் வினியோகத்தில் குளறுபடி போன்ற பிரச்னைகளால் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.புதுப்பட்டி ஊராட்சி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
காப்பிளியபட்டி, டி.புதுப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி உட்பட 10க்கு மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சி விஸ்தரிப்பு பகுதிகளைச் சுற்றிலும் சில ஆண்டுகளாக குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதிய அடிப்படை வசதிகளின்றி இப்பகுதியில் வசிப்போர் தவித்து வருகின்றனர். சில கிராமங்களில் குண்டும் குழியுமான தெருக்களில் போக்குவரத்து வசதிக்காக அவதிப்பட்டு வருகின்றனர். பல மாதங்களாகியும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி முழுமை பெறவில்லை. பெரும்பாலான வார்டுகளில் போதிய சாக்கடை வசதி இல்லாமல் தெருக்களில் அசுத்த நீர் தேங்குகிறது. இவற்றின் மீதுள்ள குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கின்றனர். தண்ணீர் வழங்கலில் நிலவும் அலட்சியம், குளறுபடிகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நடவடிக்கை இல்லை
சென்றாயப்பெருமாள் ,விவசாயி, சிறுநாயக்கன் பட்டி : நீராதாரங்களை பாதுகாக்க அரசு மட்டுமின்றி நீதிமன்ற உத்தரவுகளும் அவ்வப்போது பிறப்பிக்கப்படுகிறது. பொதுப்பணி, வளர்ச்சி துறை அதிகாரிகளோ, உள்ளாட்சி அமைப்புகளோ இவற்றை கண்டுகொள்வதில்லை. சிறுநாயக்கன்பட்டி கண்மாயில் ஊராட்சி நிர்வாகமே கழிவுகளை குவிக்கிறது.
சுற்றியகண்மாய்களில் வண்டல், சுக்கா மண் வளத்தை சமூக விரோதிகள் திருடி செல்கின்றனர். பெருமளவு விவசாய நிலமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதுவரை முழுமையான தூர்வாருதல், கரை பலப்படுத்தல், வரத்து நீர் ஆதார பராமரிப்பு பணிகள் பெயரளவில் கூட நடக்கவில்லை.
தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை
துரைச்சாமி ,விவசாயி, சிறுநாயக்கன்பட்டி : சிறுநாயக்கன்பட்டியில் 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றி சில மாதங்களுக்கு முன் புதிய தொட்டி கட்டப்பட்டது. சோதனை முயற்சியாக அவ்வப்போது தண்ணீர் ஏற்றினர். தற்போது வரை முழுமையான வினியோகம் துவங்கவில்லை. கட்டப்பட்ட சில நாட்களில் குழாய்களில் கசிவு அதிகரித்து பாசி படர்ந்துள்ளது. தரைப்பகுதி சேதமடைந்துள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
கழிவு மேலாண்மையில் அலட்சியம்
வேலுச்சாமி ,ஹிந்து முன்னணி ஒன்றிய நிர்வாகி, காப்பிளியபட்டி : காப்பிளியபட்டியில் சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளின்றி சுகாதாரக்கேடான சூழலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். குழாய் உடைப்பை காரணம் கூறி 4 வாரங்களாக தண்ணீர் வினியோகம் இல்லை. குடியிருப்புகளை சூழ்ந்து மழை, சாக்கடை நீர் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரிப்பால் பலர் பாதிப்படைந்துள்ளனர். திடக்கழிவு மேலாண்மை பணியை, ஊராட்சி நிர்வாகம் முழுமையாக கண்டு கொள்வதில்லை. கண்ட இடங்களில் குப்பையை குவித்து எரிக்கின்றனர்.
பொறுப்பற்ற நிர்வாகம்
தங்கச்சாமி,விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர், ரெட்டியார்சத்திரம் : வீடு தோறும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் சரிவர செயல்பாட்டில் இல்லை. வரத்து வாய்க்கால்களில் வரும் சொற்ப தண்ணீரும் கண்மாய்களுக்கு வந்து சேர வழி இல்லை. கனமழை பெய்தாலும வரத்து வாய்க்கால்கள் காணாமல் போனதால் தண்ணீர் வருவது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. கண்மாய்களின் உள்பகுதியிலேயே ஆக்கிரமிப்பு விவசாயம் தாராளமாக நடக்கிறது.
போதிய சுகாதார வளாகங்கள் அமைக்கவில்லை. டி.புதுப்பட்டி மயானப்பாதை, காப்பிளியபட்டி ரோடு உள்பட பல பகுதிகளை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது.

