ADDED : டிச 25, 2024 03:42 AM

திண்டுக்கல், : தங்களுக்கு சொந்தமான நிலத்தை ஆளுங்கட்சி பின்புலம் உள்ள தனிநபர் ஒருவர் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்துவிட்டதாக கூறி திண்டுக்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லையடுத்து பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி உட்பட்ட அச்சராஜாக்காப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகப்ப கோனார். இவருக்கு முருகன் உட்பட 4 பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு இதே பகுதியில் 94 சென்ட் விவசாய நிலம் உள்ளது. அரசியல் பின்புலம் உள்ள ஒருவர் போலீசார் இருவர் உதவியுடன் போலி பத்திரம் தயாரித்து எங்களது நிலத்தினை விற்பனை செய்து விட்டதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளபத்திர பதிவு அலுவலகத்திற்கு முருகன் குடும்பத்தார் , ஊர்மக்களுடன் வந்தனர். ஏற்கனவே சார்பதிவாளர் அலுவலகத்தில் இதுபோன்ற நில அபகரிப்பு முயற்சி நடக்கிறது என்பது குறித்த புகார் அளித்தும் அரசியல் பின்புலம் உள்ள நபருக்கு ஆதரவாக பத்திரம் பதிவு செய்துள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட முருகன் ,அவரது மைத்துனர் வெற்றிவேல் கூறியதாவது : 1992 ல் சோனமுத்து, பாப்பாத்தி, ராஜகோபால், ராமசாமி ஆகியோரிடமிருந்து 2 ஏக்கர் 82 சென்ட் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். இடத்திற்கான அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளோம். எங்கள் இடத்திற்கு பக்கத்து இடத்தின் சொந்தக்காரர் கிருஷ்ணன் சேர்வை .இந்நிலையில் சம்மந்தமே இல்லாத அரசியல் பின்புலம் உள்ள நபர் எங்களது 94 சென்ட் இடத்தை அபகரிக்க முயற்சித்தார். பக்கத்து நிலத்துகாரர் பெயரை மாற்றி அவரது நிலத்தை வேறு ஒருவருக்கு விற்கும் முயற்சி நடந்தது. அரசியல் பின்புலம் உள்ள நபர் போலீசார் இருவர் துணையோடு அடியாட்களோடு அவ்வப்போது எங்களை மிரட்டினார். எங்களது இடத்தை பெயர் மாற்றம் செய்து அபகரிக்கும் நோக்குடன் செயல்பட்டு வந்ததால் பத்திரப்பதிவுத்துறைக்கு 2 மாதமாக புகார் அளித்த வண்ணம் இருந்தோம். ஆனால் 3 நாட்களுக்கு முன்பு சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதரவுடன் பத்திரப்பதிவு செய்துள்ளனர். கேள்வி கேட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்கின்றனர் என்றனர்.
பத்திரபதிவு அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் புகார் வழங்கி உள்ள நிலையில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்கிறோம் என்றனர்.
பா.ஜ., போராட்ட எச்சரிக்கை
முருகனிற்கு ஆதரவாக பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். தனபாலன் கூறியதாவது : திண்டுக்கல் மாவட்டத்தில் சில மாதங்களாக போலி பத்திரம் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஒருவருக்கு சொந்தமான வீடு, நிலம் அவர்கள் கையில் இருக்கும் போது அவர்களுக்கு தெரியாமலே பத்திரப்பதிவானது மாவட்ட பத்திரப்பதிவுத் துறைகளில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் ,அவரது உறவினர்கள் பெயர்களில் போலி பத்திரங்கள் மூலம் தொடர்ந்து பத்திரப்பதிவு நடைபெறுகிறது. முதல்வரும், பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்யாவிட்டால் பா.ஜ., சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.