/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் ஆதிக்கம் செலுத்தும் போலி கைடுகள்
/
பழநி கோயிலில் ஆதிக்கம் செலுத்தும் போலி கைடுகள்
ADDED : ஏப் 15, 2025 07:37 AM

பழநி: பழநி கோயிலில் போலி கைடுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கோயில் நிர்வாகம் எச்சரிக்கைகளை வெளியிட்ட போதும் பக்தர்கள் ஏமாறுவது வாடிக்கையாகி வருகிறது.
பழநி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் போலி கைடுகள் கிரிவீதி, கோயில் வெளிப்புற வளாகத்தில் சுற்றி வருகின்றனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போலி கைடுகள் பக்தர்களை எளிதாக ஏமாற்றியதாக புகார் எழுகிறது.
கோயில் சார்பில் போலி கைடுகளை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவிப்புகளை ஒலிபெருக்கியில் தெரிவித்து வருகின்ற நிலையிலும், எளிதாக சென்று தரிசனம் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி பக்தர்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட கைடுகள் யாரும் நியமிக்கப்படவில்லை.
உள்ளூர்வாசிகளுக்கு பாதிப்பு
சந்திரசேகர், வாகன விற்பனையாளர், பழநி: கோயில்களில் போலி கைடுகள் இல்லாத சூழல் உருவாக வேண்டும். பழநி கோயிலில் போலி கைடுகளினால் ஏமாறும் வெளியூர் பக்தர்கள் பழநிவாழ் மக்களின் மீது தவறான எண்ணம் உருவாகிறது.
வெளியூர்களுக்கு சென்று பழநியில் இருந்து வருகிறோம் எனக் கூறும் போது அவர்களுடைய செயல்பாடு மாறுபடுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது.
அறிவிப்பில் மாற்றம் வேண்டும்
ரமேஷ்குமார், ஐ.டி ஊழியர், பழநி: பழநி கோயிலில் போலி கைடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் வெளியூர், வெளி மாநில பக்தர்கள் இவர்களின் பேச்சை நம்பி ஏமாறுகின்றனர்.
கோயில் சார்பில் வெளியிடப்படும் அறிவிப்பில் புகார் தெரிவிக்கும் இடம், தொலைபேசி எண்களை சேர்த்து அறிவிக்க வேண்டும்.
இதனால் எச்சரிக்கையுடன் இருக்கும் பக்தர்கள் புகார் தெரிவிக்க வசதியாக இருக்கும்.