/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் இணைப்புக்கு கூடுதல் வசூல்; விவசாயிகள் புகார்
/
மின் இணைப்புக்கு கூடுதல் வசூல்; விவசாயிகள் புகார்
ADDED : டிச 19, 2025 07:57 AM

திண்டுக்கல்: 'தட்கல்' திட்டத்தில் 2025--26ம் ஆண்டு விவசாய மின் இணைப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் அரசு நிர்ணயித்த தொகையினைக் காட்டிலும் கூடுதலாக மின்வாரியத்தினர் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி , பகிர்மான கழகத்தினால் நடைமுறைபடுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்றரை ஆண்டுகளாக இது குறித்த அறிவிப்புகள் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் 'தட்கல்' திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.அதன்படி தட்கல் திட்டத்தில் 2025--26ம் ஆண்டு விவசாய மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பங்கள் , புதிதாக பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களும் 'தட்கல்' 2025--26ல் இணைப்பு பெற தகுதியானவை எனவும் கூறப்பட்டுள்ளது. வருவாய் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர் பெயரில் 'டிடி' எடுத்து விண்ணப்பிக்கலாம். 5 எச்.பி., வரையிலான இணைப்புக்கு ரூ. 2.50 லட்சம், 5 முதல், 7.5 எச்.பி., வரையில், ரூ.2.75 லட்சம், 7.5 , 10 எச்.பி., வரை ரூ.3 லட்சம்,10 முதல் 15 எச்.பி., வரையில் ரூ. 4 லட்சம் என 'டிடி' எடுத்து வழங்க வேண்டும். இந்நிலையில் மின்வாரிய அலுவலர்களால் டிடி தொகையினை தவிர்த்து கூடுதலாக பணம் கேட்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: தட்கல் சுயநிதி திட்டம், இலவசம் என்ற மூன்று பிரிவின் கீழ் விவசாயத்திற்கும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இலவச பிரிவில் மின் இணைப்பு வேண்டி பதிவு செய்து 15 ஆண்டுகளுக்கு மேலான விவசாயிகள் கூட காத்திருக்கின்றனர். தட்கல் பிரிவில் பணம் கட்டிய விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். பணம் கட்டிய விவசாயிகளுக்கு கூட ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் கூடுதலாக அலுவலக செலவு எனக்கூறி ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் என கேட்கின்றனர். இதனால் விவசாயிகள் நொந்து போய் உள்ளனர். இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

