/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரவு, பகலாக மணல் கொள்ளை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
/
இரவு, பகலாக மணல் கொள்ளை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
இரவு, பகலாக மணல் கொள்ளை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
இரவு, பகலாக மணல் கொள்ளை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
ADDED : நவ 22, 2025 03:35 AM

திண்டுக்கல்: குளங்கள், மலைப்பகுதி கரடுகளில் சட்டவிரோதமாக மண் அள்ளும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் புகார் கூறினர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, வேளாண் இணை இயக்குநர் பாண்டியன், நேர்முக உதவியாளர்(வேளாண்மை) நாகேந்திரன் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் விவாதம் கலெக்டர் : விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையால் பரப்பலாறு அணையை துார்வாரப்பட உள்ளது. வனப்பகுதியில் அணை இருப்பதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பருவமழைக்காலம் முடிந்ததும் துார்வாரும் பணிகள் தொடங்கும். அணையை துார்வாருவது இதுவே முதல்முறை.
ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் குளங்களில் சட்டவிரோதமாக மண் அள்ளி செங்கல்சூளைக்கு அனுப்பப் படுகிறது. மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய பெரியகரடில் அதிகளவில் சுரண்டி மணல் அள்ளப்படுகிறது. இதனால் மலைகள் காணாமல் போகின்றன. கேரளா உட்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு மணல் அனுப்பப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். சோமுராஜ், குஜிலியம்பாறை: குளங்களில் அனுமதி இல்லாமல் வண்டல் மண்ணை சுரண்டி அள்ளுகின்றனர். இரவு, பகலாக நுாற்றுக்கணக்கான லோடு மணல் அள்ளப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டும் குறைகிறது. வருவாய்த்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
வீரப்பன், குஜிலியம்பாறை: குளங்களில் அனுமதி இல்லாமல் மண் அள்ளும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் : குளங்கள் ,பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக மண் அள்ளும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை ரூ.6.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனிமவளத்துறையினர் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்லம், தும்பலப்பட்டி: நாளுக்குநாள் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. எதிர்கால சந்ததியினர் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்க கூடாது. இதை கருதி மஞ்சளாறு அணையை துார்வார வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 150 அடியாக உயர்த்தினால் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். அணையில் கழிவு நீர் கலக்கிறது. இதனையும் தடுக்க வேண்டும்.
கலெக்டர் : துார்வாருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜான்பெலிக்ஸ், சாணார்பட்டி: தவசிமடை பகுதி மாந்தோப்புகளில் இளைஞர்கள் கும்பலாக வந்து மது அருந்திவிட்டு நிலங்களில் காலி பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். எங்கள் பகுதிகில் போலி பத்திரப்பதிவு அதிகரித்துள்ளது.
கலெக்டர் : இது குறித்த புகார்கள் வருகின்றன. இளைஞர்கள் சமுதாய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அதேநேரம் போலீஸ் ரோந்தை அதிகரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காசிமாயன், நிலக்கோட்டை : வைகை ஆற்றிலிருந்து நிலக்கோட்டைக்கு அமைக்கப்பட்ட கால்வாயின் மதகு மேடாக உள்ளதால் தண்ணீர் வருவதில்லை. 5 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கிறது. காட்டு பன்றிகளின் தொல்லையை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகேந்திரன்,கலெக்டர் நேர்முக உதவியாளர் : வனத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இழப்பீடுக்கான வழிமுறையையும் தெரிவிப்பர்.
சின்னப்பன், அனுமந்தராயன்கோட்டை : குடகனாற்றின் குறுக்கே ஆக்கிரமித்து தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ளது. ஒருசொட்டு தண்ணீர் கூட வராமல் விவசாயம் செய்வதற்கு, ஆடு, மாடுகள் வளர்ப்புக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. ஒரு லட்சம் பேர் வரை பாதிக்கின்றனர். குடகனாற்றில் ஆக்கிரமிப்பை அகற்றி மரபு வழிப்பாதையின் வழியே தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.ஆர்.ஓ.,: தனிப்பட்ட முறையில் தண்ணீரை நிறுத்துவதை அனுமதிக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

