/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிட்கோவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு; நீதிபதி ஆய்வு
/
சிட்கோவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு; நீதிபதி ஆய்வு
ADDED : அக் 02, 2024 02:14 AM

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கொத்தையம் பகுதியில், சிட்கோ எனும் சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்குள்ள கொத்தையம் ஊராட்சி வெடிக்காரன் வலசு பகுதியில், 70 ஏக்கரில் அரளி குத்துக்குளம் உள்ளது. அரசு பதிவேட்டில், இந்த இடம் தரிசாக காட்டப்பட்டுள்ளது.
இங்கு தமிழக அரசு சார்பில் சிட்கோ அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. சிட்கோ அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாமல் போகும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் சிட்கோ அமைப்பதற்கு எதிராக உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளன.
இவ்வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், சிட்கோ அமைவதாகக் கூறப்படும் இடத்தை, உயர் நீதிமன்றம் நீதிபதி சுவாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். அரசு கூடுதல் வழக்கறிஞர் வீரகதிரவன், மாவட்ட கலெக்டர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

