/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓடை துார்வாராததால் நிரம்பாத கண்மாய்கள்; குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
/
ஓடை துார்வாராததால் நிரம்பாத கண்மாய்கள்; குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
ஓடை துார்வாராததால் நிரம்பாத கண்மாய்கள்; குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
ஓடை துார்வாராததால் நிரம்பாத கண்மாய்கள்; குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
ADDED : டிச 21, 2024 05:28 AM

திண்டுக்கல் : ''நீர் வழித்தடங்களை துார்வாராமல் இருந்ததால் மழை காலத்திலும் 17 கண்மாய்களில் நீர் நிரம்பவில்லை''என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் பாண்டியன்,கலெக்டர் நேர்முக உதவியாளர் லீலாவதி,தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நடராஜன்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் விவாதம்
நாகராஜன்,அக்கரைப்பட்டி: திண்டுக்கல் பழநி ரோடு அக்கரைப்பட்டி பகுதி பஸ் ஸ்டாப் அருகில் மின் விளக்குகள் இல்லாமல் இரவு இருள் சூழ்ந்து கிடப்பதால் பயணிகள் தவிக்கின்றனர்.
கலெக்டர்: மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கவேல்,தங்கம்மாபட்டி: பல பகுதிகளில் உள்ள குளங்களின் மதகுகளை சரி செய்ய வேண்டும். தங்கம்மாகுளம்,ஆண்டிகுளங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறுகிறது. காட்டுமாடுகள்,மயில்கள் பயிர்களை சேதப்படுத்துகிறது.
கலெக்டர்: பிரச்னைகளை மனுவாக எழுதி கொடுங்கள். தீர்வு காணப்படும்.
சவடமுத்து,நாகையகோட்டை: எங்கள் பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளது. தற்போது பெய்த மழையால் 5க்கு மேலான கிணறுகள் சேதமடைந்துள்ளது. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
கலெக்டர்: கிணறுக்கு இழப்பீடு உள்ளதா என்பது தெரியவில்லை. ஆய்வு செய்து சொல்கிறோம்.
பாலு,லந்தகோட்டை: விவசாய தோட்டத்துக்கு தட்கல் முறையில் பணம் செலுத்தி 2023ல் மின் இணைப்பு பெற்றேன். 30 நாட்களில் மின் மாற்றியிலுள்ள செம்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடினர். பாளையம் மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
கிருஷ்ணவேனி (மின்வாரிய உதவி செயற்பொறியாளர்) : மின் கம்பிகள் திருட்டு குறித்து முதல் தகவல் அறிக்கை வரவில்லை.
கலெக்டர்: காரணங்களை கூறி அலைக்கழிக்க வேண்டாம். உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன்,நிலக்கோட்டை: நீர் வழித்தடங்கள் துார்வாராததால் தற்போது பெய்த மழையில் நிலக்கோட்டை சுற்றிய 17 கண்மாய்களில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்.
கலெக்டர்: நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
துவக்கத்தில் மனு வாங்கிய கலெக்டர்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கும் போதெல்லாம் மனு கொடுப்பவர்கள் கூட்டம் முடிந்தபின் கலெக்டரிடம் மனு கொடுத்து செல்வார்கள்.
ஆனால் நேற்று நடந்த கூட்டத்தின் போது கூட்டம் ஆரம்பிக்கும் முன்னரே கலெக்டர் பூங்கொடி,யாராவது அவசர வேலை,மருத்துவமனைக்கு செல்பவர்கள் இருந்தால் மனுக்களை கொடுத்து செல்லுங்கள் என்றார். உடனே கூட்டத்தில் அமர்ந்திருந்த பாதி விவசாயிகள் மனு கொடுத்து புறப்பட்டனர். இதனால் குறைகளை தெரிவிப்பதற்காக வந்த விவசாயிகள் குறைகளை தெரிவிக்காமல் மனுவை மட்டும் கொடுத்து சென்றனர். இதுமட்டுமில்லாமல் பேசுவதற்காக வந்த விவசாயிகளும் நீண்ட நேரமாக காத்திருந்த இவர்கள் விவசாயிகள் குறைதீர் கூட்டம் முன்புபோல் நடக்கவில்லை என புலம்பினர்.

