/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெடிச்சத்தத்தால் அச்சம் விவசாய குறைதீர் கூட்டத்தில் முறையீடு
/
வெடிச்சத்தத்தால் அச்சம் விவசாய குறைதீர் கூட்டத்தில் முறையீடு
வெடிச்சத்தத்தால் அச்சம் விவசாய குறைதீர் கூட்டத்தில் முறையீடு
வெடிச்சத்தத்தால் அச்சம் விவசாய குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ADDED : டிச 21, 2025 05:49 AM
திண்டுக்கல்: வெடிச்சத்தத்தால் அச்சம் ஏற்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில்நடந்த இக்கூட்டத்தில்
விவசாயிகள் விவாதம் நல்லசாமி: ஒட்டன்சத்திரம் சின்னகால் குளம் மறுகால் துார்வாருவதற்கும், நீலமலைக் கோட்டை கிராமத்தை சுற்றிய பகுதிகளில் யானை புகுந்து விவசாய நிலத்தை சேதப்படுத்துவதை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொப்பம்பட்டி, கள்ளிமந்தையம் வறட்சி பகுதியாக இருப்பதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
கலெக்டர்: வனத்துறை மூலம் காட்டு யானைகள் விரட்டப்படும். சின்னக்குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கவேல்: ஆர்.கோம்பை ஊராட்சியில் புதிய ஊராட்சியை உருவாக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தர மறுக்கின்றனர். யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது.
கலெக்டர்: புதிய ஊராட்சியில் கிராமங்களை இணைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும். நகைக்கடன் , யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்
வீரப்பன்: விவசாயிகளுக்கு பட்டா கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
கலெக்டர்: விரைவில் வழங்கப்படும்.
ராமசாமி: மூன்று நாட்களுக்கு முன்பு வெடிசத்தம் கேட்டதால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். வெடிசத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி: வெடிசத்தம் கேட்ட பகுதியை சென்னையிலிருந்து ஆய்வாளர்கள் வந்து ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர்.
ஜோசப்செல்வராஜ்: தருமத்துப்பட்டி, சுரைக்காப்பட்டி காய்கறி சந்தை அருகில் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்பனை நடக்கிறது.
ராமசாமி: குடகனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். அதை வலியுறுத்தி அமைதியாக போராடக்கூட அனுமதி கிடைப்பதில்லை.
முதலமைச்சர் வரும் போது குடகனாறு விவசாயிகள் சந்திக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும்.குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் உள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குணசேகரன்: தொப்பம்பட்டியில் உள்ள கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகள் பொதுமக்கள் பாதிக்கின்றனர் இதனை தடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

