ADDED : ஏப் 12, 2025 05:16 AM

நத்தம் : கோவில்பட்டி மேலத்தெருவில் மந்தை பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. ஊர்வலமாக கரகம் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வெட்டுக்காரத்தெரு பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் அழகர்கோவில் சென்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருதலும்,1008 சங்காபிஷேகமும் நடந்தது. அன்று இரவு செட்டியார்குளம் விநாயகர் கோயிலில் இருந்து கரகம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், விளக்குபூஜை, அரண்மணை பொங்கல் வைத்தல், குத்துவிளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது.
நிலக்கோட்டை : விளாம்பட்டி முத்தாலம்மன் திருவிழா பங்குனி கடைசி செவ்வாய்கிழமை துவங்கியது. முதல் நாள் தோரணமூங்கில் ஊண்டும் நிகழ்வு நடந்தது. அன்று இரவு பிள்ளையார்நத்தம் சென்று முத்தாலம்மனை மாலைப்பட்டி, கவுன்டன்பட்டி, எத்திலோடு, மீனாட்சிபுரம் கிராமத்தினர் வழிபாட்டனர். ஏப்.9 காலை அம்மன் விளாம்பட்டி வந்தடைந்தார். மாலை ஆயிரம்பொன் சப்பரத்தில் வீதி உலா வந்தார். ஏப்.10ல் தீச்சட்டி, பால்குடம் என பத்து ஊர் பொதுமக்கள் நேர்த்திகடன் செய்து வழிபட்டனர். இரவு அம்மன் பூ பல்லக்கில் வீதி உலா வந்தார். நேற்று ஊஞ்சல் ஆடி மக்களுக்கு காட்சியளித்த நிலையில் இன்று மஞ்சள் நீராடி பூஞ்சோலை செல்லுதலுடன் திருவிழா நிறைவு பெறும்.
வத்தலக்குண்டு: மார்க்கண்டேயன் கோயில் பங்குனி திருவிழாவில் கடந்த செவ்வாயன்று சக்தி கரகம் அழைத்து வரப்பட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். பகவதி அம்மன் அழைத்து வரப்பட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு பூஜை நடந்தது.