/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அசுத்தம்... ஆக்கிரமிப்பு... அலட்சியம்... குமுறும் எம்.வி.எம்.நகர் குடியிருப்போர்
/
அசுத்தம்... ஆக்கிரமிப்பு... அலட்சியம்... குமுறும் எம்.வி.எம்.நகர் குடியிருப்போர்
அசுத்தம்... ஆக்கிரமிப்பு... அலட்சியம்... குமுறும் எம்.வி.எம்.நகர் குடியிருப்போர்
அசுத்தம்... ஆக்கிரமிப்பு... அலட்சியம்... குமுறும் எம்.வி.எம்.நகர் குடியிருப்போர்
ADDED : பிப் 03, 2024 06:05 AM

திண்டுக்கல் : சாக்கடை வசதியின்றி ரோட்டில் ஓடும் கழிவுநீரால் அசுத்தம், எங்கும் ஆக்கிரமிப்பு ,ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத நிலை, பல தரப்பில் முறையிட்டும் சீரமைப்பில் நடவடிக்கை எடுக்காது அதிகாரிகளின் அலட்சியம் என திண்டுக்கல் எம்.வி.எம்.நகர், ராஜ்நகர் குடியிருப்போர் பாதிக்கின்றனர்.
திண்டுக்கல் பழைய கரூர் ரோடு பகுதி எம்.வி.எம்.நகர், ராஜ்நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராம்குமார், செயலாளர் நாராயணன், துணைத்தலைவர் ஜெயசீலன், செயற்குழு உறுப்பினர்கள் அமிர்தநாத், பரமசிவம், தெய்வநாயகம், அய்யனார், செல்லமுத்து கூறியதாவது:
மாவட்டத்தில் பெரிய அளவில் குடியிருப்போர்களை உள்ளடக்கி பலநுாறு குடும்பங்களின் உரிமையியல் தொகுப்பாக ஆரம்பிக்கப்பட்டதுதான் எங்கள் குடியிருப்போர்நலச்சங்கம். ராம்நகர் குறுக்கு தெருக்கள், நாகப்பா நகர், ராமசாமி நகர், எழில் அவென்யு, ஆர்.எஸ்.கார்டன்,
ஸ்ரீவெங்கடாஜலம் நகர், ராமசாமி நகர், வி.ஐ.பி.நகர், எம்.வி.எம்.நகர், ராஜ்நகர் என பெரும்பகுதிகளின் மையமாக இந்த குடியிருப்போர் நலச்சங்கம் விளங்குகிறது. எங்கள் பகுதிகளின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளை கிராம சபை கூட்டம் என பலமுறை மனு கொடுத்தும்
பலனில்லாமல் உள்ளது. மகாகவி பாரதியார் ரோடு, ராமசாமி காலனி 1வது தெரு ரோடுகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாமல் உள்ளது.
வி.ஐ.பி.நகர் நகர் சிவன் கோயில் அருகே அடைக்கப்பட்ட பாதையை மீண்டும் புழக்கத்தில் விட ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதிகளின் அனைத்து பகுதிகளிலும் ரோடு போடப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
பணியில் தொய்வு
இதனால் கப்பி கற்களாக ரோடு முழுவதும் பரவி வாகனங்களின் டயர்களை பஞ்சராக்குகிறது. சுகாதார பணியில் தொய்வு என்பது எங்கள் பகுதியின் சாபக்கேடாகவே மாறி விட்டது.
வாரம் 3 முறை மட்டுமே தெருக்களில் குப்பை சேகரிக்கும் பணி முன்பு நடந்தேறியது. தற்போது துாய்மை பணியாளர்கள் வருவதும், போவதும் தெரியாதபடி ரகசிய புதிராக மாறி விட்டது. இதனால் வீடு தோறும் குப்பை தேக்கம் அதிகரித்துள்ளது. குப்பை சேகரிப்புபணியின் போது பணியாளர்கள் குறைந்த பட்சம் விசில் ஊதியாவது பகுதி மக்களை அழைக்கலாம்.
இல்லையேல் தெருக்கள் தோறும் மூலை முடுக்குகளில் குப்பை சேர்ந்து சுகாதார கேடு தவிர்க்க முடியாததாகும்.
துாய்மை இந்தியா திட்டத்தை பறைசாட்டும் வகையில் பொது இடங்களில் குப்பை கொட்ட கூடாது என்ற பிரசார விழிப்புணர்வில் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
ராமசாமி காலனி 5வது தெரு, மகாகவி பாரதியார் ரோடு, எம்.வி.எம். நகர் 3, 4 வது தெருக்கள்,ராஜ்நகர் 1,2 வதுதெருக்களில் சாக்கடை வசதி கேள்விக்குறியாகி வருகிறது. சாக்கடைகள் துார்வாரப்படாமல் உள்ளதால் கழிவு நீர் ரோட்டில் ஆறாக ஓடுகிறது. இதை மிதித்துதான் வீடு சென்றாக வேண்டும்.
நாகப்பா நகர் 1, 2வது குறுக்கு தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளது. தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு பகுதியாக்க வேண்டும். ராமசாமி காலனி 1வது தெரு, மகாகவிபாரதியார் ரோடு சந்திப்பில் அமைத்துள்ள கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்து பயனற்று கிடக்கிறது. அதை சரி செய்து மீண்டும் செயல்படுத்த நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பா நகர் சமுதாயக்கூடம் அருகே உள்ள பரம்பரியமான நீர்வரத்துள்ள கிணற்று பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் சுத்திகரிப்பு செய்து குடிநீராக்கி விநியோகித்தால் எங்கள் பகுதியின் குடிநீர் பிரச்னை அறவே தீரும். பாதுகாப்பின்றி உள்ள அந்த கிணற்றை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைத்து மேல் மூடி போட வேண்டும்.
ரேஷன் கடை
இதேபோல் ராஜ்நகர் 2 வது தெருவில் உள்ள இடத்தில் ஒரு கிணறு மூடப்பட்டுள்ளது. அந்த கிணற்று நீர் உபயோகமின்றி உள்ளது. இதையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பலநுாறு குடும்பங்கள் வசிக்கும் எங்கள் பகுதிக்கென தனியாக ரேஷன் கடை கேட்டு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து செவிசாய்க்க மறுத்து வருகிறது.
ராமசாமி காலனி 6வது தெருவில் சமுதாயக்கூடம் செல்லும் பொதுபாதையை சட்டவிரோத கும்பல் ஆக்கிரமித்ததோடு தடுப்பு சுவரையும் கட்டி பல மாதங்களாக அனுபவித்து வருகிறது. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்பு பாதையை தனிநபரிடம் இருந்து மீட்க வேண்டும் என்றனர்.

