ADDED : ஆக 23, 2026 06:12 PM
நெய்காரபட்டி: -பழநி நெய்க்காரப்பட்டி அருகே பெரிய கலையம்புத்துார் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய வசதியாக 60 அடி நீளம், 30 அடி அகலத்தில் கொட்டகை அமைத்திருந்தனர். நேற்று அப்பகுதியில் நடந்த காதணி விழா ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதில் வான வேடிக்கை பட்டாசு ஒன்று பள்ளிவாசல் கொட்டகை மீது விழுந்து தீ பற்றியது. அங்கு இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. பள்ளிவாசலில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படவில்லை. வேகமாக பரவிய தீயை அருகில் இருந்தவர்கள் அணைக்க முயற்சி செய்தனர். பின் தகவலறிந்த பழநி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர். பொது நிகழ்ச்சிகளில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க உள்ளாட்சி அமைப்புகள் எச்சரிக்கை விட வேண்டும் என, நிலைய அலுவலர் தெரிவித்தார்.
