ADDED : நவ 02, 2024 06:34 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் 9 இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டது.
தீபாவளி பட்டாசுகள் மூலம் வெளியாகும் தீ துகள்கள் அருகிலிருக்கும் வீடுகள்,தென்னை மரங்களில் பட்டு எளிதில் தீப்பற்றுகின்றன.
இதை தடுப்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் 10 தீயணைப்பு அலுவலங்களிலும் அவசர கால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் பயன்பாட்டில் இருந்தது.
182 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருந்தனர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் பட்டாசு வெடித்ததில் ஆரோக்கியராஜ் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் வீட்டின் உள்பகுதியில் பிடித்த தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த பர்னிச்சர் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. ராக்கெட் வெடியால் பாறைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தென்னை மரம் தீ பிடித்து எரிய தண்ணீர்பீய்ச்சி அணைக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம்,வத்தலக்குண்டு,நத்தம் போன்ற பகுதிகளில் 4 இடங்களில் தென்னை மரங்கள் தீ பிடித்தது. 1 இடத்தில் வீடு தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
வேடசந்துார்: திருமாணிக்கனுாரை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் 11. 6 ம் வகுப்பு படிக்கிறார். தீபாவளியை முன்னிட்டு நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். பூந்தொட்டி வெடிக்காது என கருதிய ஹரிஹரசுதன் தனது உள்ளங்கையில் வைத்து தீ பற்ற வைத்து உள்ளார்.
தீப்பொறி கிளம்பியதும் கையில் வைத்து கொண்டே நடனமாடி உள்ளார். வெடிக்காத பூந்தொட்டி, திடீரென வெடித்ததால் அவரது வலது கை கருகியது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நத்தம் :நத்தம் அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன் 40.தீபாவளியை முன்னிட்டு வெடிகள் வாங்கி வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்துள்ளார். இந்த வெடிகளை எடுத்து அவரது மகன்கள் வெடித்து வந்தனர். வெடிகள் வைத்துள்ள அறையில் ஊதுபத்தியை அணைக்காமல் வைத்து விட்டு சென்று விட்டனர்.
இதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த வெடிகள் வெடித்து முற்றிலுமாக தீ பிடித்து எரிய தொடங்கியது . நத்தம் தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகின. இதுபோல் ஏரக்காபட்டியில் நாகராஜ் கூரை வீட்டில் வெடி வெடித்து கூரையின் மேல்புறம் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். நத்தம் போலீசார்விசாரிக்கின்றனர்.