ADDED : ஆக 28, 2025 04:32 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லை சேர்ந்த அச்சக உரிமையாளரிடம் நிலம் வாங்கிக்கொள்வதாக மோசடி செய்த திருச்சியை சேர்ந்த நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
திண்டுக்கல் ஆர்.எம்.,காலனி 12வது தெருவை சேர்ந்தவர் சரவணன் 42, அச்சகம் வைத்துள்ளார். இவருக்கு, வடமதுரை அருகே கொல்லம்பட்டியில் 9.2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்க முயற்சி செய்தார். திருச்சியில் உதிரிபாக தொழிற்சாலை நடத்திவரும் வினோத்குமார் 40, என்பவர் இந்த நிலத்தை ரூ.6 கோடியே 58 லட்சத்துக்கு வாங்கி கொள்வதாக கூறினார். 2024 ஜூனில், அட்வான்ஸ் தொகையாக ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் கொடுத்து நிலத்தின் அசல் ஆவணங்களை வாங்கிச்சென்றார்.
சில வாரங்களில் வருமானவரியில் தப்புவதற்காக ரூ.3.6 கோடியை சரவணன் நண்பர்களின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் மீண்டும் சரவணனை தொடர்பு கொண்ட வினோத்குமார், நான் அனுப்பிய மொத்தப்பணம் ரூ.3 கோடியே 60 லட்சத்தையும் திரும்ப அனுப்புங்கள், பத்திரப்பதிவின்போது மொத்தமாகவே தந்துவிடுகிறேன் என கூறியுள்ளார். அதன்படி பணத்தை சரவணனின் நண்பர்கள் வினோத்குமாருக்கு திரும்ப அனுப்பினர்.
ஆனால் பத்திரப்பதிவுக்கு வராமல் வினோத்குமார் காலம் தாழ்த்தினார். சந்தேகமடைந்த சரவணன், அசல் ஆவணங்களை திரும்பகேட்டபோது, தரமறுத்துள்ளார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் சரவணன் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., குமரேசன் உத்தரவின்பேரில் வினோத்குமார் மீது இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ., ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.